‘இன்னைக்கு அந்த 3 பேரும் கேப்டன் ஆகி இருக்காங்கன்னா, அதுக்கு விதை போட்டது தோனிதான்’!.. தாறுமாறாக புகழ்ந்த பட்லர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உருவாவதற்கு தோனிதான் முக்கிய பங்கு வகிக்கிறார் என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் புகழ்ந்து பேசியுள்ளார்.

நடப்பு 2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 8 அணிகளில் 4 அணிகளுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்தான் கேப்டனாக உள்ளனர். ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இளம்வீரர் சஞ்சு சாம்சன் முதல் முறையாக கேப்டனாக வழி நடத்துகிறார். அதேபோல் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்தை புதிய கேப்டனாக டெல்லி அணி நியமித்துள்ளது. இவர்கள் இருவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜாஸ் பட்லர் பேட்டி ஒன்றில் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘விக்கெட் கீப்பருக்குதான் ஆட்டத்தின் மீதான பார்வை கூர்மையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கவும், பந்துவீச்சாளர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ற வகையில் பீல்டர்களை நிற்க வைக்கவும் ஒரு விக்கெட் கீப்பரால்தான் முடிவு எடுக்க முடியும் என நான் கருதுகிறேன்.

அதனால்தான் தோனி ஒரு விக்கெட் கீப்பிங் கேப்டனாக இந்த அளவுக்கு ஜொலித்துள்ளார். தற்போது தோனியின் இந்த வழியை பின்பற்றி இளம் வீரர்களும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன் பணியை செய்ய தயாராகியுள்ளனர். குறிப்பாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த கே.எல்.ராகுல், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சேர்ந்த பண்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பர் கேப்டன்களாக அணியை வழி நடத்துகின்றனர்.

அதற்கு விதை போட்டது தோனிதான். இவரை பின்தொடர்வதால், அவர்கள் மூவரும் இளம் வயதில் கீப்பிங் செய்வது மட்டுமல்லாமல், கேப்டன்ஷிப் செய்ய முடியும் என நம்பிக்கை உண்டாகியுள்ளது. அதனால்தான் அவர்கள் ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு வருகின்றனர்’ என பட்லர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக ஜாஸ் பட்லர் விளையாடி வருகிறார். இந்த நிலையில் ராஜஸ்தான் அணியிக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சஞ்சு சாம்சன் குறித்து பேசிய பட்லர், ‘சஞ்சு ஒரு அற்புதமான வீரர். மிகவும் அமைதியாக இருப்பார். அவரது தலைமையின் கீழ் விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்