'மேட்ச்'க்கு நடுவே 'தோனி' செய்த காரியம்.. "ச்சே, இது மட்டும் அன்னைக்கே நடந்துருந்தா, நம்ம லெவலே வேற.." வருந்திய 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் பட்லர் மட்டும் ஓரளவு சிறப்பாக ஆடினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டது. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய சென்னை அணி, இந்த முறை நல்ல ஃபார்முடன் திகழ்கிறது. இதன் காரணமாக, சிஎஸ்கே கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனிடையே, சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, டெவாட்டியா வீசிய 14 ஆவது ஓவரில், தோனி (Dhoni) பந்தை அடித்து விட்டு, ரன் ஓட முயன்றார். ஆனால், மறுமுனையில் நின்ற ஜடேஜா ரன் வேண்டாம் எனக்கூற, தோனி மீண்டும் கிரீஸுக்கு செல்ல முயன்றார்.


அதற்கு முன் பந்து வேகமாக வந்த நிலையில், டைவ் அடித்து பேட்டை உள்ளே வைத்தார் தோனி. ஒரு நொடி தாமதமாக தோனி வந்திருந்தால் கூட, அவர் அவுட்டாகி இருப்பார். ஆனால், டைவ் அடித்ததால் அவரது விக்கெட் தப்பித்தது.

தோனியின் இந்த டைவ் மூலம் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமில்லாது, இந்திய ரசிகர்களும் சில பழைய நினைவுகளை நினைத்து ஏக்கமடைந்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு, ஜூலை 9 ஆம் தேதியன்று நடைபெற்ற உலக கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக, கடைசி 10 பந்துகளில், 25 ரன்கள் தேவைப்பட்ட போது, தோனி ரன் அவுட்டானார்.

அவர் அந்த போட்டியில், டைவ் அடிக்க முயற்சி செய்யாமல், பேட்டைக் கொண்டு கிரீஸில் வைக்க முயன்றார். ஆனால், கப்தில் வீசிய பந்து, துல்லியமாக ஸ்டம்பை தாக்கி, தோனியை அவுட் செய்தது. அந்த போட்டியில், தோனி களத்தில் நின்றிருந்தால், நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கும்.





 

ஆனால், அதிர்ஷ்டம் இல்லாமல் தோனி ரன் அவுட்டான நிலையில், அதன் பிறகு தோனியும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார். இந்திய ரசிகர்களுக்கு, இன்னும் அந்த ரன் அவுட் மறவாத வடுவாக இருக்கும் நிலையில், நேற்றைய போட்டியில் தோனி டைவ் அடித்து, ரன் அவுட்டில் இருந்து தப்பியதைக் கண்டதும், உலக கோப்பை அரை இறுதி போட்டியில், இப்படி டைவ் அடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என வேதனையுடன் ரசிகர்கள், ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



இது தொடர்பான பதிவுகள், நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்