‘5 வருசத்துக்கு முன்னாடி பார்த்த தோனியே இல்ல இது’!.. ‘ஒரு கேப்டனா அவர் இதை செஞ்சே ஆகணும்’.. கம்பீர் சொன்ன அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பார்த்ததுபோல் தோனி இல்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இன்றைய (16.04.2021) போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேல்.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. முன்னதாக நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. அதனால் சிஎஸ்கே அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், தோனியின் கேப்டன்ஷி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘சிஎஸ்கே அணியை வழி நடத்தும் விதமாக பேட்டிங்கில், தோனி முன் வரிசையில் களமிறங்கி விளையாட வேண்டும். 7-ம் வீரராக களமிறங்கி ஒருபோதும் அணியை வழி நடத்த முடியாது. அதேபோல் சென்னை அணியின் பவுலிங் வரிசையிலும் பிரச்சனை இருக்கிறது’ என கம்பீர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இப்போது இருக்கும் தோனி, நாம் 5 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தவர் போல் இல்லை. அப்போதெல்லாம் எதுவாக இருந்தாலும் தோனி முதலில் தாமே முன்வந்து செய்ய தொடங்குவார். என்னை பொறுத்தவரை 4 அல்லது 5-வது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்க வேண்டும். அதற்கு கீழே களமிறங்க கூடாது’ கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 7-வது வீரராக களமிறங்கிய தோனி, டக் அவுட்டாகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்