VIDEO: ‘ரோஹித்தை அவுட்டாக்க மாஸ்டர் ப்ளான்’!.. கண்ணாலயே சிக்னல் கொடுத்த ‘தல’.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவை அவுட்டாக்க பீல்டரிடம் தோனி சிக்னல் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மொயின் அலி 58 ரன்களும், டு பிளசிஸ் 50 ரன்களும் எடுத்தனர். அதேபோல் 6-வதாக களமிறங்கிய அம்பட்டி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதனை அடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 35 ரன்களில் அவுட்டாக, அடுத்த வந்த சூர்யகுமார் யாதவும் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து டி காக்கும் 38 ரன்களில் அவுட்டாகினார். இதனால் 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த பொல்லார்டு மற்றும் க்ருணால் பாண்ட்யா கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதனால் சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் திணறினர். இதில் க்ருணால் பாண்ட்யா 32 ரன்களில் அவுட்டாக, அடுத்த வந்த ஹர்திக் பாண்ட்யா 7 பந்துகளில் 16 ரன்கள் அடித்து அவுட்டானர்.

ஆனாலும் பொல்லார்டு கம்பீரமாக நின்று சிக்சர், பவுண்டரி என விளாசி தள்ளினார். கடைசி வரை இவரை சென்னை அணியால் அவுட்டாக முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக பொல்லார்டு 87 ரன்கள் (8 சிக்சர், 6 பவுண்டரி) அடித்து அசத்தினார்.

இந்த நிலையில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவை அவுட்டாக்க, சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டரிடம் சிக்னல் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், 219 என்ற பெரிய இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடியதால், ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மாவும், டிக் காக்கும் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசிக் கொண்டே இருந்தனர். இதனால் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்களை மும்பை அணி குவித்தது.

இதனால் இந்த கூட்டணியை பிரிக்க நினைத்த சிஎஸ்கே கேப்டன் தோனி, பீல்டிங்கை சற்று மாற்றி நிற்க வைத்தார். அப்போது ஷர்துல் தாகூர் வீசிய 8-வது ஓவரின் 4-வது பந்தை ரோஹித் ஷர்மா எதிர்கொண்டார். அப்போது பவுண்டரி லைனில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு, தோனி கண்ணாலயே சிக்னல் கொடுத்து சற்று தள்ளி நிற்க வைத்தார். அதேபோல் அந்த பந்திலேயே ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் ஷர்மா அவுட்டாகினார். இந்த வீடியோ தற்போது வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்