ஏங்க கடைசி வரை அந்த பையனுக்கு பவுலிங் தரல..? போட்டி முடிந்ததும் தவான் கொடுத்த புது விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் கொடுக்காததற்கான காரணம் குறித்து ஷிகர் தவான் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் டெம்போ பவுமா 110 ரன்களும், வான் டெர் டஸ்ஸன் 129 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 12 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் 79 ரன்கள் எடுத்திருந்தபோது ஷிகர் தவான் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து 51 ரன்கள் எடுத்திருந்தபோது விராட் கோலியும் அவுட்டாகினார்.

இதனை அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 16 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 2 ரன்னிலும், அஸ்வின் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய ஷர்துல் தாகூர் மட்டுமே 50 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். ஆனாலும் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்தது. அதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் அறிமுக வீரராக ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார். தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டரை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் நீண்ட நேரமாக போராடினார். அப்போது வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆல்ரவுண்டராக களமிறக்கப்பட்ட ஒருவருக்கு ஏன் பவுலிங் கொடுக்கவில்லை? என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், ‘சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாலும், விக்கெட்டில் சில திருப்பங்கள் ஏற்பட்டதாலும் கூடுதல் பந்துவீச்சாளர் தேவைப்படவில்லை. கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டனர். மிடில் ஓவர்களில் விக்கெட் விழாத போது மீண்டும் முக்கிய பவுலரை கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் தான் திருப்பு முனையைக் கொண்டு வர வேண்டும். ஆனால் எங்களால் அதை செய்ய முடியவில்லை.

சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் விளையாட வேண்டும். எப்போது அணிக்குதான் முதலிடம் கொடுக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட விளையாட்டு முக்கியமானதுதான். அதே நேரத்தில் அணிக்காக உங்கள் விளையாட்டை எப்படி மாற்றிக் கொள்வது என்பதை அறிவது மிகவும் முக்கியம். முக்கியமான நேரத்தில் பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டால் அதை நீங்கள் உருவாக்க வேண்டும்’ என ஷிகர் தவான் கூறியுள்ளார். விராட் கோலி-ஷிகர் தவான் கூட்டணி ஆட்டமிழந்த பின் நிலையான ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைக்காததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

DHAWAN, VENKATESHIYER, INDVSSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்