‘முட்டாள், சுயநலவாதின்னு சொல்லியிருந்தா கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன், ஆனா...!’ இனவெறி சர்ச்சை.. உருக்கமான அறிக்கை வெளியிட்ட டி காக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இனவெறி குறித்த சர்ச்சைக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குவின்டன் டி காக் முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.

Advertising
>
Advertising

கறுப்பின மக்கள் மீது நடக்கும் வன்முறையை எதிர்த்து ‘Black Lives Matter’ (BLM) என்ற முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் கால்பந்து, கிரிக்கெட் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் போது வீரர்கள் முட்டியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்த விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. அப்போது தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் முட்டியிட்டபோது, டி காக் (De Kock) மட்டும் முட்டியிட மறுத்து நின்றுகொண்டிருந்தார். இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் டி காக்கின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனால் அடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து டி காக் நீக்கப்பட்டார். மேலும் அடுத்தடுத்து போட்டிகளில் டி காக் இடம்பிடிப்பாரா என கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து டி காக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், ‘நான் முட்டியிட்டு ஆதரவு கொடுக்காததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். கறுப்பின மக்களுக்கு துணையாக நிற்பது எவ்வளவு முக்கியம் என்று எனக்கு தெரியும். ஒரு வீரராக நல்ல விஷயங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக இதை செய்யவில்லை. அப்படி யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்.

சிறுவயதில் நானும் இனவெறியால் பாதிக்கப்பட்டவன்தான். என் வளர்ப்பு தாய் கறுப்பினத்தை சேர்ந்தவர்தான். ஒருவேளை நான் இனவெறி பிடித்தவனாக இருந்திருந்தால், அன்றைக்கு பொய்யாக முட்டியிட்டு நாடகமாடியிருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. நான் எப்படிப்பட்டவன் என்று எனது குடும்பத்தினருக்கும், அணி வீரர்களுக்கும் தெரியும்.

என்னை சுயநலவாதி, முட்டாள் என்று யாரேனும் கூறியிருந்தால் கூட அது என்னை பெரிய அளவில் பாதித்திருக்காது. ஆனால் இனவெறி பிடித்தவன் எனக் கூறியதுதான் மிகுந்த வேதனையளிக்கிறது. இனி வரும் போட்டிகளில் முட்டியிட்டு ஆதரவு கொடுப்பேன்’ என டிக் காக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்