‘ஆட்டோ ஓட்டுநர் மகள்’!.. மூங்கிலில் வில், அம்பு செஞ்சு பிராக்டீஸ்.. இப்போ உலகின் நம்பர்.1 வில்வித்தை வீராங்கனை.. யார் இந்த தீபிகா குமாரி..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒரே நாளில் வில்வித்தை போட்டிகளில் ஹாட்ரிக் தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவின் தீபிகா குமாரி சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராத்து சட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவ்நாராயண் மஹாதோ. இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளார். இவரது மனைவி கீதா செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதியரின் மகள் தீபிகா குமாரி.

இவர் தனது 11 வயதில் மாங்காயை குறி வைத்து வில்வித்தை பயிற்சியை தொடங்கியுள்ளார். இதன்பின்னர் மூங்கிலைக் கொண்டு வில், அம்பு வடிவமைத்து பயிற்சி செய்துள்ளார். இதற்கு டாடா வில்வித்தை பயிற்சி அகாடமியில் வில்வித்தை பயின்று வந்த அவரது உறவுக்கார பெண்ணான வித்யா குமாரி உதவியுள்ளார். இதனை அடுத்து நேர்த்தியாக வில்வித்தை பயிற்சி பெற வேண்டுமென தீபிகா குமாரி விரும்பியுள்ளார்.

ஆனால் அவரது அம்மா கீதா, மகளை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இருந்தாலும் மகளின் விருப்பத்துக்கு தடை கூறாமல் வில்வித்தைப் பயிற்சிக்கு அனுமதித்துள்ளார். ஆரம்பத்தில் தீபிகா குமாரி பயிற்சிகளுக்கு பணம் இல்லாமல் அவரது பெற்றோர் சிரமப்பட்டுள்ளனர்.

சிரமங்களுக்கு இடையே 2005-ம் ஆண்டு அர்ஜூன் வில்வித்தை பயிற்சி அகாடமியில் தீபிகா குமாரி சேர்ந்துள்ளார். இதனை அடுத்து ஒரே ஆண்டில் தனது திறமையை நிரூபித்து டாடா வில்வித்தை பயிற்சி அகாடமியில் இடம்பிடித்துள்ளார். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் அவர் வீட்டுக்கே திரும்பவில்லை. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த கேடட் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிறகே தீபிகா குமாரி வீடு திரும்பியுள்ளார்.

அதன்பின்னர், காமன்வெல்த், ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை தீபிகா குமாரி வென்றுள்ளார்.

தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் ஒற்றையர், மகளிர் மற்றும் கலப்பு அணி என மூன்று விதமான போட்டிகளிலும் தங்கள் வென்று தீபிகா குமாரி அசத்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் நம்பர் 1 வில்வித்தை வீராங்கனை என்ற அந்தஸ்தை அவர் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தீபிகா குமாரி பங்கேற்க உள்ளார். இதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண், தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்