"அந்த ஒரு 'பவுன்சர' பாத்ததும், இனிமே 'கிரிக்கெட்'டே வேணாம்யா 'சாமி'ன்னு வர நெனச்சேன்.." அக்தரால் பயந்து நடுங்கிய 'சமி'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்றைய கிரிக்கெட் உலகில், பேட்ஸ்மேன்கள் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், ஒரு சமயத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள், கிரிக்கெட் உலகையே ராஜ்ஜியம் செய்து கொண்டிருந்தனர்.

அதிலும் குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர்கள் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வரும் அணி பாகிஸ்தான் தான். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர், முகமது சமி, உமர் குல், வஹாப் ரியாஸ், முகமது அமீர்   என அனைத்து காலகட்டத்திலும் மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் சோயிப் அக்தர் (Shoaib Akhtar), மிகவும் குறிப்பிடத்தக்கவர். தன்னுடைய காலகட்டத்தில் ஆடிய சச்சின், டிராவிட், சேவாக், ஜெயசூர்யா, ரிக்கி பாண்டிங், மார்க் வாக், லாரா என பல ஜாம்பவான்களை தனது பந்து வீச்சால் அவர் திணறடித்துள்ளார். அண்மையில் தான், அக்தர் பந்து வீசி தனது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி (Daren Sammy), அக்தர் பந்து வீச்சைக் கண்டு தான் நிலை குலைந்து போன நிகழ்வு பற்றி, தற்போது பகிர்ந்துள்ளார். தனது 19 வயதில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒன்றில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக, சமி அறிமுகமாகி இருந்தார்.

அப்போது நடந்த ஒரு சம்பவம் பற்றி பேசிய சமி, 'சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒன்றில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நான் அறிமுகமானேன். அப்போது, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் ஆடினோம். முகமது சமி, வக்கார் யூனிஸ், அக்தர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தொடங்கியது.

அந்த போட்டியில், லாராவுக்கு பவுன்சர் பந்து ஒன்றை அக்தர் வீசினர். அந்த பவுன்சர் பந்து, லாராவின் தலையில் பட, கிட்டத்தட்ட மயக்கமடைந்து தரையில் விழுந்தார் அவர். 19 வயதான நான், அந்த சமயத்தில் டுவைன் பிராவோவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். இனிமேல் கிரிக்கெட் ஆட வேண்டுமா என்ற கேள்வியே எனக்குள் எழுந்தது. அந்த அளவிற்கு அக்தர் என்னை பயமுறுத்தினார்.

சில தினங்களுக்கு முன்பு தான், அக்தரை நான் இஸ்லாமாபாத்தில் சந்தித்திருந்தேன். அப்போது இது பற்றி, அவரிடமே நான் மனம் திறந்து பேசினேன். இதற்கு பதில் சொன்ன அக்தர், "லாரா எனது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்" என என்னிடம் கூறினார். ஒருவேளை, இதற்கான பதில் தான் அக்தர் வீசிய அந்த பவுன்சர் என நான் நினைக்கிறேன்.



'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' பந்து வீச வரும் போது, அவரது முடி பறந்து கொண்டு இருப்பதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்' என சமி தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்