"இதுனால தான் 'ஐபிஎல்'ல இருந்து நான் ஒதுங்கிட்டேன்..." 'ஸ்டெயின்' சொன்ன 'அதிர்ச்சி' காரணம்...கடுப்பான 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இதற்கான மினி ஐபிஎல் ஏலம், சில வாரங்களுக்கு முன் சென்னையில் வைத்து நடைபெற்றிருந்தது. ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் அதிக தொகைக்கு யாரும் எதிர்பாராத வகையில் ஏலம் போயிருந்த நிலையில், கடந்த ஆண்டு பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த டேல் ஸ்டெயின், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளாமல், தானாகவே தனது பெயரை விலக்கினார்.

தற்போது, பாகிஸ்தானில் நடைபெற்று வரும் 'பாகிஸ்தான் சூப்பர் லீக்' டி 20 தொடரில் விளையாடி வரும் ஸ்டெயின், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். 'ஐபிஎல் தொடர் தவிர மற்ற டி 20 லீக்களில் ஆடுவது என்பது, ஒரு வீரராக சற்று அதிக பலனளிப்பதை நான் கண்டேன். ஐபிஎல் தொடரில் ஆடும் போது, அணியின் பெயருக்கும், ஒரு வீரருக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும், பணம் குறித்த பேச்சிற்கும் தான் அதிக இடம் இருப்பதாக நான் உணர்கிறேன்.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் டி 20 தொடர்களில், பணத்தை விட, கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக தோன்றுகிறது. அது மட்டுமில்லாமல், ஒரு வீரருக்கான அங்கீகாரமும் கிடைக்கிறது. ஆனால், ஐபிஎல் தொடரில், ஒரு வீரர் எவ்வளவு தொகைக்கு ஏலம் போனார் என பணம் குறித்த பேச்சு தான் அதிகமாக உள்ளது. இதில் அங்கீகாரம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதனால் தான் இந்த முறை அதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்தேன்' என ஸ்டெயின் கூறியுள்ளார்.

கிட்டதட்ட, பத்து ஐபிஎல் சீசன்களுக்கு மேல் ஆடியுள்ள ஸ்டெயின், ஐபிஎல் தொடரில் வீரருக்கு சிறந்த முறையில் அங்கீகாரம் கிடைப்பதில்லை என தற்போது தெரிவித்துள்ள கருத்து, ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் மூலம் தான், பல திறமையான இளம் வீரர்களை இந்திய அணியால் கண்டுபிடிக்க முடிந்தது என்றும், வெளிநாட்டு வீரர்கள் பலர் கூட இந்தியாவில் வந்து ஐபிஎல் ஆட விருப்பப்படுவதாகவும் ரசிகர்கள் பதில் கூறி வருகின்றனர்.



 

ஐபிஎல் தொடரை விட, மற்ற டி 20 தொடர்கள் தான் சிறந்தவை என ஸ்டெயின் கூறியுள்ள கருத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 





 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்