‘உண்மையாவே அவர் எப்போ வருவார்னு தெரியல’!.. அப்படின்னா இந்த வருசம் அவரை பார்க்க முடியாதா..? சிஎஸ்கே ‘சிஇஓ’ சொன்ன முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர் குறித்து சிஇஓ காசி விஸ்வநாதன் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு ஆமீரகத்தில் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடர் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் 50 சதவீத பார்வையாளர்களுடன் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

இதற்காக கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். சென்னை அணியின் முதல் போட்டி மும்பையில் நடைபெற உள்ளதால், சிஎஸ்கே வீரர்கள்  நேற்று மும்பை சென்றடைந்தனர்.

இந்த நிலையில் InsideSport சேனலுக்கு சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார். அப்போது ஜடேஜா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘உண்மையாகவே ஜடேஜா எப்போது அணிக்கு திரும்புவார் என தெரியவில்லை. அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியால் விடுவிக்கப்பட வேண்டும் (NCA)’ என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. அப்போது ஜடேஜாவுக்கு கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. அதனால் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேறினார். சிகிச்சைக்கு பின் தற்போது ஓய்வில் இருக்கும் ஜடேஜா, ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், ஜடேஜா குறித்து அளித்துள்ள தகவல், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், நேற்று முன்தினம் சிஎஸ்கே அணி புதிய ஜெர்சியை வெளியிட்டது. இதனை தோனி அறிமுகப்படுத்திய வீடியோவை சிஎஸ்கே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்த பதிவுக்கு கீழே ‘எனக்கு ஒரு L size டி-சர்ட்’ என ஜடேஜா கமெண்ட் செய்திருந்தார். அதனால் அவர் நிச்சயம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்