‘ரூ.9 கோடி கொடுத்து எடுத்ததுக்கு நல்லா செஞ்சிட்டீங்க’!.. சிஎஸ்கே வீரரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் கிருஷ்ணப்பா கௌதமை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் (Rishabh Pant) பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அம்பட்டி ராயுடு (Ambati Rayudu) 55 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். டெல்லி அணியைப் பொறுத்தவரை அக்சர் படேல் 2 விக்கெட்டுகளும், அஸ்வின், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் ரிஷப் பந்த் களமிறங்கினர். இந்த கூட்டணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. டெல்லி அணிக்கு குறைவான இலக்கே நிர்ணயிக்கப்பட்டதால், சிஎஸ்கே வீரர்கள் ரன்களை செல்வதை கட்டுப்படுத்தி வந்தனர்.

அப்போது தீபக் சஹார் வீசிய ஓவரில் ப்ரித்வி ஷா (18 ரன்கள்) ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் 2 ரன்னில் நடையைக் கட்டினார். இந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 15 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ரிபால் படேல், 2 பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த அஸ்வினும் 2 ரன்னில் வெளியேறினார்.

இதனால் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்தது. இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த ஹெட்மயர் (Hetmyer) மற்றும் அக்சர் படேல் (Axar Patel) கூட்டணி நிதனாமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் அதிகமாக ரன்கள் செல்லாமல் சிஎஸ்கே அணி கட்டுப்படுத்தி வந்தது.

அப்போது போட்டியின் 18-வது ஓவரை சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட ஹெட்மயர், அதை சிக்சருக்கு விளாச முயன்றார். ஆனால் பந்து பவுண்டரில் லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கிருஷ்ணப்பா கௌதமின் (Krishnappa Gowtham) கைக்கு நேராக சென்றது. ஆனால் அவர் அந்த கேட்சை தவறவிட்டார். அதனால் பந்து பவுண்டரிக்கு சென்றது.

இது ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அதற்கு காரணம் ஹெட்மயர் தான் அடிக்கடி பவுண்டரிகளை அடித்து சிஎஸ்கே பவுலர்களை அச்சுறுத்தி வந்தார். அதனால் அவரது விக்கெட்தான் முக்கியமாக பார்க்கப்பட்டது. அதுவரை சிஎஸ்கேவின் பக்கம் இருந்த ஆட்டம், அதன்பிறகு டெல்லி பக்கம் திரும்பியது.

இதனை அடுத்து கடைசி ஓவரில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் டெல்லி அணி இருந்தது. பிராவோ வீசிய அந்த ஓவரில் 8 ரன்கள் எடுத்து டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில் முக்கியமான கட்டத்தில் கேட்ச்சை தவறவிட்ட சிஎஸ்கே வீரர் கிருஷ்ணப்பா கௌதமை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 9.25 கோடி ரூபாய்க்கு கிருஷ்ணாப்பா கௌதமை சிஎஸ்கே அணி எடுத்தது.

இவ்வளவு விலை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர் தவறவிட்ட கேட்சால் அணி தோல்வியை தழுவியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட கிருஷ்ணப்பா கௌதம் விளையாடவில்லை. அவ்வப்போது மாற்றுவீரராக ஃபீல்டிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்