அன்றே கணித்த ‘தல’!.. திடீரென வைரலாகும் ‘8 வருட’ பழைய ட்வீட்.. அப்படி என்ன சொல்லி இருந்தார் தோனி..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே கேப்டன் தோனி 8 வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை மைதானம் சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், சென்னை அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது.

அதனால் இதை முறியடிக்க வேண்டும் என்றால் வெற்றி இலக்கை அதிகமாக வைப்பதான் ஒரே வழி என்பதை சென்னை அணி புரிந்துகொண்டது. அதன்படி களமிறங்கிய ஒவ்வொரு வீரர்களும் சிக்சர், பவுண்டரிகளை விளாசினர். ஆனால் ஒரு வீரர் கூட 35 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. டு பிளசிஸ் மட்டுமே அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்திருந்தார்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை சிஎஸ்கே குவித்தது. இது ராஜஸ்தான் அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்தது. அதற்கு காரணம் பேட்டிங் செய்த ஒவ்வொரு வீரர்களும் ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டதுதான். தாங்கள் விளையாடியது சில பந்துகளே ஆனாலும், பவுண்டரி, சிக்சர்களை விளாசிவிட்டதுதான் சிஎஸ்கே வீரர்கள் அவுட்டாகி இருந்தனர். குறிப்பாக கடைசி கட்டத்தில் களமிறங்கிய சாம் கர்ரன் 6 பந்துகளில் 1 சிக்சர் உட்பட 13 ரன்களும், பிராவோ 8 பந்துகளில் 20 ரன்களும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

இதனை அடுத்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியால், 20 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி 3 ஓவர்களை வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இப்போட்டியில் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 4 கேட்சுகள் பிடித்து அசத்தினார். எந்த பக்கம் திரும்பினாலும் ஜடேஜாவே பீல்டிங் செய்வதுபோல் தோன்றும் அளவுக்கு, எல்லா திசைகளில் நின்றும் கேட்ச் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கிலும் 4 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் ஜடேஜா குறித்து கடந்த 2013-ம் ஆண்டு தோனி பதிவிட்ட ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ‘சர் ஜடேஜா கேட்ச் பிடிக்க ஓடவில்லை, ஆனால் பந்து அவரை தேடி வந்து, கைகளில் விழுகிறது’ என தோனி பதிவிட்டிருந்தார்.

அதை நிரூபிக்கும் வகையில் நேற்றைய போட்டியில் ஜடேஜா கேட்ச் பிடித்து அசத்தினார். 8 வருடங்களுக்கு முன்பு தோனி பதிவிட்ட இந்த ட்வீட் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்