‘பஸ்ல அவர் பக்கத்துலதான் நான் உட்கார்ந்திருந்தேன்’!.. பயோ பபுளை தாண்டி எப்படி கொரோனா பரவியது..? மனம் திறந்த சிஎஸ்கே பேட்டிங் கோச்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி மனம் திறந்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசனை பிசிசிஐ தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இந்த தொடரில் விளையாடிய கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரீயர் ஆகியோருக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் சாஹா, டெல்லி அணியின் அமித் மிஸ்ரா என வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரை பாதியில் ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இதில் மைக் ஹசிக்கு இரண்டு முறை மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் பாசிடீவ் என வந்தது.

இதனால் டெல்லியில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னையில் கிட்டத்தட்ட 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த மைக் ஹசி, கடந்த மே 14-ம் தேதி குணமடைந்தார். இதன்பின்னர் ஆஸ்திரேலிய சென்ற மைக் ஹசி, அங்குள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று தனக்கு பரவியது குறித்து மைக் ஹசி foxsports என்ற சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், ‘ஐபிஎல் முதலில் சென்னை மற்றும் மும்பை மைதானங்களில் நடைபெற்று வந்த வரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இதன்பின்னர் வேறு மைதானங்களுக்கு போட்டி மாற்றப்பட்டபோது தான் பயோ பபுள் உடைந்திருக்க வாய்ப்புள்ளது. மும்பையில் இருந்தவரை பாதுகாப்பாக இருந்தோம். அங்கிருந்து டெல்லிக்கு மாறும் போதுதான் பிரச்சனை ஏற்பட்டது.

பயோ பபுளில் இல்லாத மைதான ஊழியர்கள், விமானநிலைய ஊழியர்கள், பைலட்டுகள், பாதுகாப்பு ஊழியர் என பலருடன் தொடர்பு ஏற்பட்டது. எனக்கு முதல் பரிசோதனையில் வீரியம் குறைவான பாதிப்புதான் இருந்தது. இதனால் அடுத்த பரிசோதனையில் நெகட்டீவ் என வரும் நினைத்தேன். ஆனால் அதிலும் பாசிட்டீவ் என வந்தது. அதன்பிறகு தான் எனக்குள் கொரோனா அறிகுறிகள் இருப்பதை உணர்ந்தேன்.

பேருந்தில் அதிக தடவை பவுலிங் பயிற்சியாளர் பாலாஜியின் அருகில் அமர்ந்துதான் பயணம் செய்தேன். அதனால் அவருக்கு தொற்று உறுதியானதும், எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். கொரோனா தொற்றால், உடலில் சிறிது தொந்தரவுகள் இருந்தது, மற்றபடி உயிர் பயம் வரும் அளவிற்கு எதையும் நான் உணவில்லை’ என மைக் ஹசி பகிர்ந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிகள் சென்னை மற்றும் மும்பை மைதானத்தில் மட்டும் மாறிமாறி நடைபெற்று வந்தன. இதன்பின்னர் டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானத்துக்கு போட்டிகள் மாற்றப்பட்டது. இதன்பின்னர் தான் வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்