‘என்ன நெனச்சிட்டு இருக்கீங்க..?’ இதோட ரெண்டாவது தடவை.. கோலி கிட்ட கம்ளைண்ட் பண்ணிய ரிஷப்.. பவுண்டரி லைனில் நடந்த பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து ரசிகர்கள் செய்த அநாகரிக செயலால் கேப்டன் விராட் கோலி கோபமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து களமிறங்கிய புஜாரா 1 ரன்னில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. இந்த சமயம் களமிறங்கிய ரஹானே ஓரளவுக்கு தாக்குபிடித்து விளையாடினார். ஆனால் அவரும் ராபின்சன் வீசிய 26-வது ஓவரில் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கைகொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவரும் 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் வந்த வேகத்தில் வெளியேற 78 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளும், ராபின்சன் மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். தற்போது இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது பவுண்டரி லைனின் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த முகமது சிராஜ் மீது இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் பந்தை தூக்கி எறிந்தனர். இதைப் பார்த்த ரிஷப் பந்த் உடனே விராட் கோலியிடம் கூறினார். இந்த சம்பவத்தால் கோலியும் கடும் கோபமடைந்தார். அப்போது இங்கிலாந்து ரசிகர்களை நோக்கி, ‘நாங்கள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம், ஆனால் நீங்கள் பூஜ்ஜியம்’ என்பது போல சைகை காட்டி முகமது சிராஜ் பதிலடி கொடுத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போட்டி முடிந்தபின் பேசிய ரிஷப் பந்த், ‘இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் சிராஜ் மீது பந்தை வீசி எறிந்தனர். அதனால் கோலி கடும் கோபமடைந்தார். ரசிகர்கள் எங்களை நோக்கி என்ன வேண்டுமானாலும் கத்தலாம், எது வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் பொருட்களைக் கொண்டு எறியக்கூடாது. இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல’ என கூறினார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில், நிறவெறி தாக்குதலை முகமது சிராஜ் சந்தித்திருந்தார். இந்த முறை இங்கிலாந்து ரசிகர்கள் அவர் மீது பந்தை வீசி எறிந்ந்துள்ளனர். அதேபோல் லார்ட்ஸில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போதும் ரசிகர்கள் சிலர் கே.எல்.ராகுலை நோக்கி பாட்டில் மூடிகளை வீசினர். அதற்கு அப்போதே கேப்டன் கோலி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்து ரசிகர்கள் மீண்டும் அதேபோல் சம்பவத்தில் ஈடுபட்டது இந்திய ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்