'இந்திய அணி அங்கிருந்து திரும்பி வரட்டும்'.. 'செமி ஃபைனல் குறித்து கேக்கப் போறோம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அரையிறுதியில் தோல்வியடைந்தது குறித்து, கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி கேட்க உள்ளதாக நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, அரையிறுதியில் தோல்வியடைந்தது, தோனியை 7-வது இடத்தில் களம் இறக்கியது குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது. வருங்காலத்தில் சிறந்த அணியை எப்படி கட்டமைப்பது என்பது குறித்து கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் சிஒஏ எனப்படும் நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தும் என அதன் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வினோத் ராய் கூறுகையில் ‘இப்போதுதான் உலகக் கோப்பை அரையிறுதி முடிந்துள்ளது. இந்திய அணி திரும்பி வரவேண்டும். அதன்பின்னர் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் விராட் கோலியுடன், அவர்கள் விடுமுறை முடிந்தவுடன் நாங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவோம். அதேபோல் வருங்காலத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து தேர்வுக்குழு தலைவருடனும் ஆலோசனை நடத்துவோம்’ என்றார். மேலும் எந்த மாதிரியான ஆலோசனைக் கூட்டம் இருக்கும் என கேள்வியெழுப்பியதற்கு, அவர் பதில் தர மறுத்துவிட்டார்.

இந்நிலையில், விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியிடம் அரையிறுதியில் தோனியை 7-வது இடத்தில் களம் இறக்க காரணம் என்ன?, ஒன்றரை ஆண்டுகளாக 4-வது இடத்திற்கு அம்பதி ராயுடுவை தயார் செய்துவிட்டு, உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்காதது ஏன்? போன்ற கேள்விகள் கேட்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவில் தலைவராக வினோத் ராய், டயானா எடுல்ஜி, ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் ரவி தோட்ஜே ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்