‘இதை அவர் கிட்ட நாங்க எதிர்பார்க்கல’.. அப்பவே ஆட்டம் எங்க கையை விட்டு போயிருச்சு.. ஓபனாகவே விமர்சித்த சங்ககாரா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிறிஸ் மோரிஸின் ஆட்டம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா விமர்சனம் செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக எவின் லூயிஸ் 53 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 31 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 17.1 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 50 ரன்களும், கே.எஸ்.பரத் 44 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தை பெங்களூரு அணி தக்க வைத்துக் கொண்டது.

இந்த நிலையில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்காக ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை (Chris Morris) பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போட்டியில் 4 ஓவர்களை வீசியுள்ள கிறிஸ் மோரிஸ் விக்கெட் ஏதும் எடுக்காமல் 50 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். பெங்களூரு அணியின் வெற்றிக்கு குறைவான இலக்கே நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், ஆரம்பம் முதலே ராஜஸ்தான் அணி ரன்களை கட்டுப்படுத்தி வந்தது.

இந்த சூழலில் கிறிஸ் மோரிஸ் வீசிய 17-வது ஓவரில் 3 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 22 ரன்களை மேக்ஸ்வெல் விளாசினார். அதனால் பெங்களூரு அணி எளிதாக வெற்றி பெற்றுவிட்டது. அணியின் முக்கியமான வீரரே ரன்களை வாரி வழங்கியது ரசிகர்களிடையே விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் கிறிஸ் மோரிஸ் ஆட்டம் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா (Kumar Sangakkara), ‘ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் கிறிஸ் மோரிஸ் அற்புதமாக விளையாடினார். ஆனால் இரண்டாம் பாதியில் அந்த வேலையை அவர் பூர்த்தி செய்யவில்லை. அவருக்கும் தெரியும், நாங்கள் எதிர்பார்ப்பதை அவர் செய்யவில்லை என்று.

நான்கு ஓவர்களில் 50 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அதிலும் அவர் வீசிய கடைசி ஓவரில் விக்கெட் எடுக்காமல் ரன்களை வாரி வழங்கியுள்ளார். அப்போதே ஆட்டம் எங்கள் கையை விட்டு சென்றுவிட்டது’ என அவர் கூறியுள்ளார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை கொடுத்து (ரூ. 16.25 கோடி) ராஜஸ்தான் அணி கிறிஸ் மோரிஸை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்