ஏன் ‘நடராஜன்’ டி20 உலகக்கோப்பை அணியில் செலக்ட் ஆகல..? எல்லார் மண்டைக்குள்ளையும் ஓடிட்டு இருந்த ஒரே கேள்வி.. ஒருவழியாக ‘காரணத்தை’ சொன்ன தேர்வுக்குழு தலைவர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாததற்கான காரணம் வெளியாகியுள்ளது.

ஏன் ‘நடராஜன்’ டி20 உலகக்கோப்பை அணியில் செலக்ட் ஆகல..? எல்லார் மண்டைக்குள்ளையும் ஓடிட்டு இருந்த ஒரே கேள்வி.. ஒருவழியாக ‘காரணத்தை’ சொன்ன தேர்வுக்குழு தலைவர்..!

ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இதில் தமிழக சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Chetan Sharma reveals why Natarajan not included in India’s squad

இதுகுறித்து தெரிவித்த இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா, ‘அணி தேர்வில் நடராஜன் குறித்து ஆலோசித்தோம். காயம் காரணமாக நீண்ட நாள்களாக அவர் விளையாடாமல் உள்ளார். அதனால் அவரை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அணியில் கலவையான வீரர்கள் இருக்க வேண்டும் என தேர்வாளர்களுக்கும் ஆசைதான். ஆனால் ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் மிகவும் மெதுவானவை.

அதனால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே எடுத்துள்ளோம். ஹர்திக் பாண்ட்யா கூடுதலாக அணியில் உள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தேவைப்பட்டிருந்தாலும் கூட, மைதானத்தின் தன்மையை மனதில் வைத்து அவரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது’ என சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பாக நடராஜன் விளையாடினார். அந்த தொடரில் தோனி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் பெற்றார்.

அதனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் நெட் பவுலராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். அந்த தொடரில் வீரர்கள் சிலர் காயத்தால் வெளியேறவே, நடராஜனுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. நெட் பவுலராக சென்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20  ஆகிய மூன்று தொடர்களிலும் அறிமுகமாகி அசத்தினார்.

இதனை அடுத்து இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடிய நடராஜனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் தொடரின் பாதியிலேயே அவர் வெளியேறினார். பின்னர் காயத்துக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு, சில நாட்கள் ஓய்வில் இருந்தார்.

தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் மருத்துவக் கண்காணிப்பில் நடராஜன் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்