Video: சச்சின் தேடிய அந்த 'தமிழர்' இவர் தான்... நினைச்சுக் கூட 'பார்க்க' முடியல... நெகிழும் 'சென்னை' ரசிகர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டார். அதில் ‘தான் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் தங்கியிருந்தபோது, ஒரு தமிழர் தனக்கு ஒரு முக்கிய டிப்ஸ் கொடுத்ததாகவும், அது தனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவரை நான் சந்திக்க விரும்புவதாகவும், அவரை கண்டுப்பிடிக்க உதவி செய்யுங்கள் என்றும்’ அவர் கேட்டிருந்தார்.

அவரது இந்தப் பதிவு தமிழர் ஒருவர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது. இந்நிலையில், அந்த தமிழர் யார் என்று தெரியவந்துள்ளது. அவர் சென்னை  பெரம்பூரைச் சேர்ந்த குரு பிரசாத் என்பவர் தான். கடந்த 2001-ம் ஆண்டில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு, இங்கு நடந்த பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

அவர் இருந்த 2 -வது தளத்தில் கண்காணிப்பாளராக இருந்த குரு பிரசாத், தனது வருகைப் பதிவு நோட்டில், சச்சினிடம் ஆட்டோகிராஃப் வாங்கிவிட்டு, உங்களிடம் ஆலோசனை ஒன்று கூறலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு சச்சின் சொல்லுங்கள் என்று சொன்னதும், சச்சினின் ஆட்டம் சிறப்பாக  இருந்தாலும், எல்போ கார்டு தொந்தரவு செய்வதால், அது சம்பந்தமான விஷயங்களை சொல்லியுள்ளார் குரு பிரசாத்.

இதனை நிச்சயம் எடுத்துக் கொள்வதாக கூறிய சச்சின், தனது அடுத்த ஆட்டத்திலேயே எல்போ கார்டு மாற்றத்தையும் செயல்படுத்தியுள்ளார். இதனை டிவியில் பார்த்து மகிழ்ந்த குரு பிரசாத், தனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே இந்த மகிழ்ச்சியான விஷயத்தை அப்போது கூறியுள்ளார். கிட்டத்தட்ட 19 வருடங்கள் கழித்து சச்சினின் இந்த ட்வீட்டால், தற்போது வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.

இத்தனை வருடங்கள் இதை சச்சின் ஞாபகம் வைத்திருப்பார் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று குரு பிரசாத் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார். உலகத்தில் வேறு யாரும் சொல்லாததை, என் மூலம் கடவுள் அவருக்குச் சொல்ல வைத்துள்ளார் என்பதை நினைத்து, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்த குரு பிரசாத், சச்சினுடன் மீண்டும் பேசும் ஆர்வத்தில் காத்திருக்கிறார். மேலும், தனது வீட்டிற்கு சச்சின் வந்தால், மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவரின் எக்ஸ்க்ளூசீவ் பேட்டி பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

SACHIN, TENDULKAR, FAN, CHENNAI, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்