‘உயரம் கம்மியா இருக்க, போய் வேற வேலை பாரு’!.. கிரிக்கெட் அகாடமியில் சேர்க்க மறுத்த கோச்.. சோதனையை சாதனையாக்கிய தீபக் சஹார்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தீபக் சஹாரின் ஆரம்ப கட்டத்தில் உயரத்தை காரணம் காட்டி பயிற்சியாளர் ஒருவர் வாய்ப்பு கொடுத்த மறுத்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை குவித்தது. இதனை அடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் 29 ரன்களிலும், பிரித்வி ஷா 13 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.

இதனை அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 1 ரன்னிலும், மனிஷ் பாண்டே 37 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் 160 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்தது. இந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். ஆனால் அவரும் சண்டகன் ஓவரில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். இதனால் கிட்டத்தட்ட தோல்வி பெறும் நிலைக்கு இந்திய அணி சென்றது.

அப்போது களமிறங்கிய தீபக் சஹார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிகமாக பெரிய ஷாட்கள் அடிக்காமல், கிடைக்கின்ற கேப்பில் பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. மறுமுனையில் புவனேஷ்வர் குமாரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை கடைசி வரைக்கும் இலங்கை அணியால் அவுட்டாக்க முடியவில்லை. இதனால் 49.1 ஓவர்களில் 277 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்ற் பெற்றது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தீபக் சஹாரை வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் தீபக் சஹாரின் ஆரம்ப கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்த அவர், ‘தீபக் சஹார் உயரம் குறைவாக இருப்பதாக கூறி, ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியில் சேர்க்க முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் மறுத்துவிட்டார். தீபக் சஹாரை வேறு தொழில் பார்த்துக் கொள்ளும்படி கூறினார். ஆனால் அதே தீபக் சஹார்தான் தற்போது தனி ஆளாக இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார். இந்த கதையின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் திறமைகளை நம்புங்கள், வெளிநாட்டு பயிற்சியாளர்கள் கூறுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என வெங்கடேஷ் பிரசாத் பதிவிட்டுள்ளார்.

கிரேக் சாப்பல் 2005 முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அப்போது கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலிக்கும், இவரும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. மேலும் கிரேக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் நடந்த ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பையில் (2007), வங்கதேச அணியிடம் இந்தியா மோசமான தோல்வியை தழுவி வெளியேறியது. அப்போது கிரேக் சாப்பல் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்