"'ஜடேஜா' மட்டும் அந்த ஒரு 'விஷயத்துல' மாறி இருந்தா, எங்களுக்கும் 'டீம்'ல சான்ஸ் கெடச்சு இருக்குமோ என்னவோ??.." ஆதங்கப்பட்ட 'சாஹல்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கவனமும், தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தான் உள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள இந்த போட்டி, ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில வீரர்கள் பெயர் இடம்பெறாமல் போனது, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் அதிகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் பெயர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்திய அணியில் ஒரு காலத்தில், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பிரிக்க முடியாத சூழல் காம்போவாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரின் இடத்தையும், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நிரப்பித் தக்க வைத்துக் கொண்டனர்.

இவர்கள் இருவரும் இணைந்து, எதிரணியினரை திணறடித்து வந்த நிலையில், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்புகள் மங்கத் தொடங்கியது. இதனிடையே, சமீப காலமாக நடைபெற்று வரும் சில தொடர்களில், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர், எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐபிஎல் தொடர்களில், குல்தீப் யாதவிற்கு வாய்ப்பே அதிகம் கிடைக்காத நிலையில், சாஹல் தனக்கு கிடைக்கும் வாய்ப்பையும் வீணடித்து வந்தார்.

இதன் காரணமாக தான், இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றிப் பேசியுள்ள சாஹல் (Chahal), 'நானும், குல்தீப் யாதவும் சேர்ந்து இந்திய அணிக்காக ஆடிய போது, ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சாளராக அணியில் இருப்பார். கடந்த 2018 ஆம் ஆண்டு, ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டதால், ஜடேஜா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.

ஆல் ரவுண்டரான ஜடேஜா, 7 ஆவது இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர். அது மட்டுமில்லாமல், அவரும் எங்களைப் போல ஒரு சுழற்பந்து வீச்சாளர் தான். ஒரு வேளை, ஜடேஜா ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்திருந்தால், எனக்கும், குல்தீப்பிறகும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஏனென்றால், வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டருக்கு அணியில் அதிக தேவை உள்ளது.

பொதுவாக, ஒரு தொடரை எடுத்துக் கொண்டால், நானும், குல்தீப்பும் 50 - 50 % சதவீதம் போட்டிகளில் ஆடுவோம். சில நேரம் குல்தீப்பிற்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கும். சில நேரம் நான் மட்டும் களமிறங்குவேன். ஹர்திக் இருக்கும் வரை, எங்கள் இருவருக்கும் அணியில் வாய்ப்பு இருந்தது. தற்போது எனக்கு இந்திய அணியில் இடம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டும் போதும்' என சாஹல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்