‘திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு’... ‘மூடப்பட்ட எல்லைகள்’... ‘விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட வீரர்கள்’... ‘முதல் ‘டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறுமா??’... ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பதில்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், திட்டமிட்டப்படி முதல் டெஸ்ட் போட்டியை அடிலெய்டில் நடத்த உறுதியாக உள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அடிலெய்டை தலைநகரமாகக் கொண்ட தெற்கு ஆஸ்திரேலியாவில்,  நேற்று திடீரென 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டநிலையில், இன்று புதிதாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா மற்றும் வடக்கு மாகாணங்கள் தெற்கு ஆஸ்திரேலியாவுடனான தங்களது எல்லையை மூடி இருக்கின்றன. அடிலெய்டில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிற பகுதிகளுக்கு வருபவர்களை 14 நாட்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தும்படி நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாடும் வீரர்கள், ஆஸ்திரேலியா ஏ அணி மற்றும் பிக் பாஷ்  போட்டி வீரர்கள் எனப் பலரையும் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, குயின்ஸ்லாந்து மாநிலங்களில் இருந்து விமானம் மூலமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னி நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இந்திய அணி வீரர்களும் இங்குதான் உள்ளனர்.

மேலும், தெற்கு ஆஸ்திரேலியாவில் நடந்த ஷெப்பீல்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விட்டு கடந்த 9-ந் தேதிக்கு பிறகு திரும்பியவர்களை தனிமைப்படுத்தும் படி தாஸ்மானியா சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி தாஸ்மானியா அணியில் அங்கம் வகிக்கும் டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், மேத்யூ வேட் உள்ளிட்ட வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை தாங்களே தனிமைப்படுத்தி உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக அடிலெய்டில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பாதிக்கப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆனால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும் நிலைமையை பொறுத்து இருந்து கவனித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

டெஸ்ட் போட்டிக்கு ஸ்டேடியம் இருக்கை வசதியில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த முடிவில் மாற்றம் செய்யப்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்