‘லஞ்ச் ப்ரேக் முடிஞ்சதும்.. நேரா கோலி கிட்ட போனேன்’.. பும்ரா சொன்ன சீக்ரெட்.. இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு பின் கேப்டன் கோலியிடம் பேசியது குறித்து பும்ரா பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்கள் அடித்து சிறப்பான கம்பேக் கொடுத்தது. அதனால் முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணிக்கு 367 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை நீண்ட நேரமாக இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை. இந்த சமயத்தில் 41-வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர், ரோரி பர்ன்ஸை அவுட்டாக்கி இந்த கூட்டணியைப் பிரித்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய டேவிட் மாலன் ரன் அவுட்டாகி வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட், தொடக்க ஆட்டக்காரர் ஹசீப் ஹமீதுடன் கூட்டணி அமைத்தார். இந்த ஜோடியும் நீண்ட நேரத்துக்கு நிதானமாக ஆடி இந்திய அணிக்கு சோதனை கொடுத்தது. அப்போது ஜடேஜா வீசிய ஓவரில் ஹசீப் ஹமீது அவுட்டாகினார். ஆனாலும் வெற்றி வாய்ப்பு இங்கிலாந்து பக்கமே இருந்தது.

இந்த சமயத்தில் பவுலிங் வீச வந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டுகளான ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஒல்லி போப் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக்கினார். இதனால் 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு இங்கிலாந்து அணி சென்றது. இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதனை அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, 210 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய பும்ரா, ‘இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்தேன். உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் முக்கிய கட்டத்தில் இருந்தது. ரன்கள் சென்றுவிட்டால் உத்வேகம் போய்விடும், பின் நமக்குதான் அழுத்தம் அதிகமாகிவிடும். அதனால் நெருக்கடியை அவர்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என நினைத்தேன். உடனே கோலியிடம் சென்று, நான் பவுலிங் வீசுகிறேன் எனச் சொல்லி பந்தை வாங்கினேன். கடைசியில் அதற்கு நல்ல பலனும் கிடைத்தது’ என அவர் பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்