'கடைசி' பந்தில் 'திரில்' வெற்றி பெற்ற 'மும்பை'.. "ஆனா, அந்த கடைசி 'ரன்' நியாயமா வந்ததா??.." மும்பை வீரரின் செயலால் கடுப்பான 'முன்னாள்' வீரர்!.. 'சர்ச்சை'யை கிளப்பிய 'சம்பவம்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தினால், பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், மொயின் அலி, டுபிளெஸ்ஸிஸ், ராயுடு ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில், பொல்லார்ட் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். பந்துகள் அனைத்தும் சிக்ஸ் மற்றும் பவுண்டரி என பறக்க, கடைசி ஓவரில், மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இறுதி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட, களத்தில் நின்ற பொல்லார்ட் மற்றும் குல்கர்னி ஆகியோர், வேகமாக ஓடி 2 ரன்களை எடுத்து அசத்தல் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்த சீசனில், சற்று தடுமாற்றம் கண்ட மும்பை அணி, சென்னை அணிக்கு எதிராக வெற்றி பெற்று நம்பிக்கை அளித்துள்ளதால், மும்பை ரசிகர்கள், மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதனிடையே, இந்த போட்டியின் கடைசி பந்தில் நடந்த செயல் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடைசி பந்தில், மும்பை அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது, சென்னை வீரர் லுங்கி நெகிடி பந்தை வீசுவதற்கு முன்னரே,  நான் ஸ்ட்ரைக்கர் (Non Striker) பக்கம் நின்ற குல்கர்னி, கிரீஸை விட்டு சில அடி தூரம் முன்பு சென்று விட்டார். இதன் காரணமாக, மும்பை அணி மிகவும் எளிதாக 2 ரன்களை ஓடி எடுத்தது. பொதுவாக, ஒரு பவுலர் பந்து வீசுவதற்கு முன்னர், பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறக் கூடாது. அப்படி போனால், அது தவறான செயலாக பார்க்கப்படும்.

ஐபிஎல் தொடரிலேயே, இதற்காக அஸ்வின், ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்திருந்தது, பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நிலையில், குல்கர்னியின் செய்த செயலை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் (Brad Hogg) கேள்வி எழுப்பியுள்ளார்.



அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட போது, நான் ஸ்ட்ரைக்கர் பக்கம் இருந்த வீரர், தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ரன் எடுக்கிறார். இது விளையாட்டின் உண்மையான உணர்வில் வருமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், பந்து வீசுவதற்கு முன்னரே, இப்படி ஓடினால், எளிதாக ரன் எடுத்து விடலாம். கிரிக்கெட் போட்டியில், இப்படி தான் ஆடி வெற்றி பெற வேண்டுமா என்பது போல, குல்கர்னியின் செயலை ஹாக் விமர்சனம் செய்துள்ள நிலையில், அவரது ட்வீட், ஐபிஎல் வட்டாரத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்