திடீரென விலகிய 'ஹேசல்வுட்'.. வேற லெவல் 'பிளான்' போட்ட 'சென்னை' அணி.. "ஆனா, அதுல இப்படி ஒரு சிக்கலா??".. அதிர்ச்சியில் 'சிஎஸ்கே'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது முதல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஏப்ரல் 10 ஆம் தேதியன்று மும்பை மைதானத்தில் சந்திக்கவுள்ளது.

மேலும், ஐபிஎல் போட்டிகள் நெருங்கி வருவதால், இதற்காக சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட், 14 ஆவது ஐபிஎல் சீசனில் பங்கேற்கப் போவதில்லை என சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இந்த தகவல், சென்னை அணி மற்றும் அதன் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்திருந்தது. கடந்த சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பெற்று சிஎஸ்கே வெளியேறியிருந்தது. இதனால், இந்த முறை பழைய ஃபார்மில் சிஎஸ்கே திரும்பி வரும் என எதிர்பார்த்து வரும் நிலையில், ஹேசல்வுட் வெளியேறியது, சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக எந்த மாற்று வீரரை அணியில் தேர்வு செய்யலாம் என சென்னை அணி ஆலோசித்து வருகிறது.


இதன் முதற்கட்டமாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பில்லி ஸ்டேன்லேக் (Billy Stanlake) மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ரீஸ் டாப்லி (Reece Topley) ஆகிய வீரர்களை மாற்று வீரர்களாக களமிறக்க சென்னை அணி முயற்சி செய்துள்ளது.

ஆனால், இவர்கள் இருவரும் சென்னை அணியுடன் இணைய மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 'பல முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் ஆட ஒப்பந்தமாகியுள்ளனர். இதனால், மாற்று வீரரை உடனடியாக தேர்வு செய்ய முடியவில்லை.


மேலும், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வர யோசிக்கின்றனர்' என சிஎஸ்கேவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளதாக, 'டைம்ஸ் ஆப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், சென்னை அணி மாற்று வீரராக யாரை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ராணா, டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அக்சர் படேல் மற்றும் பெங்களூர் அணியைச் சேர்ந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல, மும்பை வான்கடே மைதானத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலரும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்