‘வெஸ்ட் இண்டீசில் அசத்தும் இந்திய ‘ஏ’ அணி’... ‘தொடரை வென்று இளம் வீரர்கள் சாதனை'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஒருநாள் தொடரை, இந்திய ஏ அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்திய ‘ஏ’ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து, அதிகாரப்பூர்வமற்ற ஐந்து போட்டிகள் கொண்ட, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், உள்ளூர் நேரப்படி கடந்த செவ்வாய்கிழமை அன்று, 3-வது போட்டி நார்த் சவுண்டில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி கேப்டன் மணிஷ் பாண்டே பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி ஷுப்மான் கில், அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அன்மோல்ப்ரீத் சிங் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அதன்பின் ஷுப்மான் கில் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷ்ரேயாஸ் அய்யர் 47 ரன்களும், ஷுப்மான் கில் 77 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது.

4-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 87 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 100 ரன்கள் அடிக்க இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது. பின்னர் 296 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி களம் இறங்கியது. இந்திய ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 147 ரன்னில் சுருண்டது.

இதனால் இந்தியா ‘ஏ’ அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குருணால் பாண்டியா சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். மணீஷ் பாண்டே ஆட்ட நாயகன் விருதுபெற்றார். இதனால் இந்திய ‘ஏ’ அணி ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது. அடுத்த இரு ஒருநாள் ஆட்டங்கள் வரும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைப்பெற உள்ளது.

TEAMINDIA, WESSTINIES, INDIAATEAM, MANISHPANDEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்