‘நீங்க யார்கிட்ட கேட்டாலும் இதைதான் சொல்லுவாங்க’.. தோனியை பற்றி புவனேஷ்வர் சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறிய வார்த்தை ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

இதனால் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தலைமையிலான இளம்வீரர்களை கொண்ட இந்திய அணி, இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணைக் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை தொடரில் விளையாட உள்ளது குறித்து புவனேஷ்வர் குமாரிடம் பிசிசிஐ பேட்டி எடுத்தது. அப்போது அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது தான் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து புவனேஷ்வர் குமார் பகிர்ந்துகொண்டார்.

அதில், ‘அனைவருக்கும் தோனியை ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக தெரியும். ஆனால் அவர் எந்த அளவுக்கு சிறந்த மனிதர் என்பதை உணர்த்த வேண்டும் என்றுதான் அவ்வாறு பதிவிட்டேன். தோனி எப்போதும் மற்றவர்களுக்கு உதவக்கூடியவர். நீங்கள் எந்த வீரரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். அனைவரும் அவரது உதவும் மனப்பான்மையை குறித்துதான் சொல்வார்கள். அவர் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி’ என புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார். தோனி குறித்த இவரது பதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தபோது புனேஷ்வர் குமார் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், ‘லட்சியத்தை அடைய கடுமையாக போராடினால், நிச்சயம் அது நிறைவேறும் என நீங்கள் கற்றுக்கொடுத்தீர்கள். உங்களது கிரிக்கெட் பயணத்தில் நானும் இருந்ததை கௌரவமாக நினைக்கிறேன். உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் மஹி பாய். உங்களது வழிகாட்டுதல் விளையாட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி என்றும் எங்களுக்கு உதவியாக இருக்கும்’ என அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்