'பெரிய சதி நடக்குது!.. ஒருத்தரையும் விடமாட்டேன்'!.. கங்குலி, டிராவிடுக்கு... முன்னாள் பயிற்சியாளர் பகீர் கடிதம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட W.V.ராமன் எழுதியுள்ள கடிதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த W.V.ராமனின் பதவிக் காலம் கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து பயிற்சியாளர் பதவிக்கு W.V.ராமன், முன்னாள் பயிற்சியாளர் ரமேஷ் பவார், முன்னாள் வீரர்கள் கனித்கர், அஜய் ரத்ரா, தேர்வு குழு முன்னாள் தலைவர் ஹேமலதா கலா உள்பட 35 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் இருந்து 8 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களிடம் மதன்லால் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்காணல் நடத்தியது. இதன் முடிவில் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், மகளிர் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான 42 வயது ரமேஷ் பவார் மீண்டும் அணியின் கோச்சாக நியமிக்கப்பட்டார்.

ரமேஷ் பவார், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய பெண்கள் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர். அந்த ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசில் நடந்த 20 ஓவர் பெண்கள் உலகக் கோப்பை போட்டி வரை அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.

அந்த தொடரில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்துக்கான இந்திய அணியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையாக வெடித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மாறி மாறி புகார் தெரிவித்தனர். 

தன்னை அவமானப்படுத்தியதுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க ரமேஷ் பவார் முயற்சிக்கிறார் என்று மிதாலி ராஜ் குற்றம் சாட்ட, மிதாலி ராஜ் தந்திரமாக செயல்பட்டு அணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று ரமேஷ் பவார் புகார் கூறினார். இந்த பிரச்சினையால் பவாரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து, அந்த ஆண்டு W.V.ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இப்போது மீண்டும் ரமேஷ் பவார் பயிற்சியாளர் பதவியை கைப்பற்றி இருக்கிறார்.

இந்த நிலையில், மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இருந்து நீக்கப்பட்ட W.V.ராமன், தனக்கு எதிரான ஒரு தவறான பிரச்சாரம் பரப்பப்படுவதாகவும், அதை நிறுத்துமாறும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை வலியுறுத்தி உள்ளார்.
அதுமட்டுமின்றி, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட்டுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பயிற்சியாளராக திறமையின்மை என்பதைத் தவிர வேறு காரணங்களால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அது மிகவும் அதிருப்தியான ஒன்று என ராமன் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர், எனது செயல்பாடு மற்றும் பணி நெறிமுறைகள் குறித்து உங்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். பி.சி.சி.ஐ. அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட அந்தக் கருத்துகள் எனது விண்ணப்பத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தினவா என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும்,  இதில் முக்கியமானது என்னவெனில், என் மீதான தவறான பிரச்சாரம் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும். உங்களுக்கோ அல்லது அலுவலக பொறுப்பாளர்களுக்கோ தேவைப்பட்டால் விளக்கமளிக்க நான் தயாராக இருக்கிறேன். நான், புலம்புவதற்கும் சிணுங்குவதற்கும் இதைச் சொல்லவில்லை.
எனது 20 ஆண்டு கால பயிற்சியாளர் வாழ்க்கையில், நான் எப்போதுமே ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளேன்.

எந்தவொரு தனிநபரும் விளையாட்டு அல்லது அணியை மீறக்கூடாது. பெண்களின் கிரிக்கெட்டை மேம்படுத்த உதவும் சில பரிந்துரைகள் என்னிடம் உள்ளன. நீங்கள் ஆர்வமாக இருந்தால் அவற்றைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைவேன் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, ரமேஷ் பவார் தேர்வு செய்யப்பட்டது குறித்தும், ராமன் நீக்கப்பட்டது குறித்தும் பல விவாதங்கள் எழுந்த நிலையில், தற்போது நேரடியாக ராமன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு மீண்டும் பெண்கள் கிரிக்கெட் நிர்வாகத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்