கடைசியில் ஐசிசியிடம் போன ‘மான்செஸ்டர்’ டெஸ்ட் பஞ்சாயத்து.. வேற வழியில்ல இழப்பை சரிகட்ட இங்கிலாந்துக்கு ஒரு ‘ஆஃபர்’ கொடுத்த இந்தியா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐசிசியிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் இந்தியா 2 வெற்றிகளும், இங்கிலாந்து ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. அதனால் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மான்செஸ்டர் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பிசியோ நிதின் படேல் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அதனால் கடைசி டெஸ்ட் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ கோரிக்கை வைத்தது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனையை அடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டி நிறுத்தப்பட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. அதனால் இந்திய அணிதான் வெற்றியாளர் என கூறப்பட்டு வருகிறது. அதேவேளையில், இந்தியாதான் தாமாக முன்வந்து ஆட்டத்தை ரத்து செய்ய கோரியதால், கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வருகிறது.

இதுதொடர்பாக புகார் கடிதம் ஒன்றையும் ஐசிசி-க்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுப்பியுள்ளது. 5-வது டெஸ்ட் போட்டியில் வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும் என இங்கிலாந்து அணி கூறியுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இதனை ஈடு செய்யும் விதமாக இங்கிலாந்து அணியுடன் அடுத்த ஆண்டு கூடுதலாக டி20 தொடரில் விளையாடுகிறோம் என பிசிசிஐ சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், ‘இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இழப்பை ஈடு செய்யவும், அவர்களுடன் இருக்கும் உறவை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்’ என அவர் கூறியதாக The Hindu ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்