மேட்ச் ஃபிக்சிங் சிக்னலா..? பரபரப்பை கிளப்பிய இன்ஸ்டாகிராம் போஸ்ட்.. பிசிசிஐயின் விசாரணை வளையத்தில் ‘பஞ்சாப் கிங்ஸ்’ வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் தீபக் ஹூடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடர் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. நேற்று துபாயில் நடந்த ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் தீபக் ஹூடா (Deepak Hooda) செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று போட்டி ஆரம்பிக்கும் முன்பு, தான் ஹெல்மெட் அணியும் படியான போட்டோவை தீபக் ஹூடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பிசிசிஐ விதியின்படி ஐபிஎல் வீரர் அல்லது இந்திய அணியில் விளையாடும் வீரர், எந்தவொரு போட்டிக்கு முன்பாக அதுதொடர்பான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது. முக்கியமாக பிளேயிங் லெவன் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பதிவிடக் கூடாது. அது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது.

பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பதை மறைமுகமாக தெரிவிப்பது சூதாட்ட புக்கிகளுக்கு கொடுக்கும் சிக்னல் என சொல்லப்படுகிறது. இதனை தெரிந்து கொண்டு புக்கிகள் சூதாட்டத்தில் (Match fixing) ஈடுபட முடியும். அதனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன் எந்த வீரரும் தங்களின் சமூக வலைத்தளங்களில் போட்டியில் விளையாட உள்ளதை தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், நேற்று தீபக் ஹூடா தான் விளையாட உள்ளதை ஹெல்மெட் அணிந்து தெரியப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது பிசிசிஐ விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த முன்னாள் பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு (ACU) தலைவர் அஜித் சிங் (Ajit Singh), ‘கிரிக்கெட் வீரர்களின் சமூக வலைதள உரையாடல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது’ என தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்