‘அது சரிப்பட்டு வராது’!.. ஐபிஎல் நிர்வாக குழு சொன்ன ஆலோசனையை நிராகரித்த பிசிசிஐ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தியாவில் நடத்தப்படுகிறது. அதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சென்னை மற்றும் மும்பையில் ஐபிஎல் போட்டிகள் மாறிமாறி நடைபெற்றன. அடுத்ததாக அகமதாபாத் மற்றும் டெல்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கொல்கத்தா நைட்ரைடா்ஸ் அணி வீரர்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா-பெங்களூரு போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல் சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல்.பாலாஜி, பேருந்துப் பராமரிப்பாளர் ஆகியோர் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் விடுதியில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சஹாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இன்று நடைபெறுவதாக மும்பை-ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்ததால், ஐபிஎல் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என பலரும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மீதியிருக்கும் ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இன்று தெரிவித்துள்ளது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பிசிசிஐ செய்து தருவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஐக்கிர அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடந்ததுபோல, இந்த ஆண்டு மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளை அங்கு நடந்த ஐபிஎல் நிர்வாக குழு ஆலோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நிர்வாக குழுவின் இந்த ஆலோசனையை பிசிசிஐ நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்