'ஆஹா... சூனா பானா... நம்ம அருமை பெருமைக்கு ஆப்பு வச்சிருவாங்க போலயே'!.. 'எந்த நேரமும் தூக்கலாம்'!.. பரிதவிப்பில் பாண்டியா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தொடர்ச்சியாக ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டு வருவதால், பிசிசிஐ மாற்று நடவடிக்கைகளை இப்போதே சைலண்ட்டாக எடுத்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்ட் 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த நீண்ட நெடிய டூருக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள். ஆனால், இந்த டூரில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை.

அதற்கு பிசிசிஐ சொன்ன காரணம், அவரால் இன்னும் பவுலிங் செய்ய முடியவில்லை என்பது. ஐபிஎல் வரை ஆக்ரோஷமாக சிக்ஸர்களை பறக்கவிட்ட பாண்டியாவுக்கு, இங்கிலாந்து டூரில் இடம் கிடைக்கவில்லை. ஏனெனில், அவரது நீண்ட கால முதுகு வலி. அவரால் பேட்டிங் செய்ய முடியும். ஆனால் பவுலிங் பண்ண முடியாது. அதனால் தான் அவரை கழட்டிவிட்டது பிசிசிஐ. இப்போது இலங்கைக்கு எதிரான டூருக்கு இந்திய பி அணியுடன் செல்ல தயாராகி வருகிறார். 

அதே சமயம், பிசிசிஐ இது வேலைக்கு ஆகாது என்று நினைத்ததோ என்னவோ, இப்போது ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்களுக்கான வலையை விரித்துள்ளது. இதில், பிசிசிஐ-யின் முதல் பார்வை ஷர்துல் தாகூர் மீது தான். ஐபிஎல் ஆனாலும் சரி, சர்வதேச போட்டி என்றாலும் சரி, எப்போது இறக்கிவிட்டாலும் சிக்ஸர்களை பறக்கவிடுகிறார் ஷரதுள். 10 பந்துகளை சந்தித்தால் அதில் குறைந்தபட்சம் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் வந்துவிடுகிறது. பவுலிங்கில் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கிறார். 

இந்நிலையில், இந்திய அணியின் பவுலிங் கோச் பரத் அருண் பிடிஐ-க்கு அளித்துள்ள பேட்டியில், தன்னால் ஒரு ஆல் ரவுண்டராக செயல்பட முடியும் என்பதை ஷர்துல் தாகூர் நிரூபித்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் அவரது செயல்பாடு அட்டகாசமாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யா அபார திறமை வாய்ந்தவர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர் முதுகு வலிக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிட்டது. அதன் பிறகு திரும்பி வருவது எளிதானது விஷயம் அல்ல. ஆகையால், இப்போதைக்கு அவர் தனது உடல் வலிமையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கிடையே, இப்போது நாம் ஒரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல்-ரவுண்டர்களை உருவாக்க வேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டில் நிச்சயம் சில வீரர்கள் இருப்பார்கள். ஆனால், நாங்கள் எப்போதும் இந்திய அணியுடனேயே பயணிப்பதால், உள்ளூர் ஆல்-ரவுண்டர்களை கண்டறியும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.  எனவே, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று தேட ஆரம்பித்துவிட்டது பிசிசிஐ.'

அவர் திறமையான வீரர் என்றாலும், அவரால் முன்பு போல் மீண்டு வந்து ஆல்-ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் கொடுக்க முடியுமா? அப்படியே கொடுத்தாலும், அவர் மேற்கொண்டு காயம் வராமல், தொடர்ச்சியாக விளையாட முடியுமா? போன்ற கேள்விகளுக்கு இப்போதே இந்திய அணி நிர்வாகம் விடை தேட துவங்கிவிட்டது. லோ ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேன் என்பதை விட, ஆல் ரவுண்டர் என்பதே பாண்டியாவுக்கான மதிப்பு. அதில், பவுலிங் ஆப்ஷனை இழந்துவிட்டால், அணியில் அவருக்கான இடத்திற்கு போட்டி அதிகமாகிவிடும்.

ஏனெனில், சிக்ஸர்களை பறக்க விட நமக்கு பேட்ஸ்மேன்கள் குவிந்து கிடக்கின்றனர். ஆனால், ஹர்திக் ஆல்-ரவுண்டராக இருக்கும் வரையே மதிப்பும், இடமும் என்றால் அது மிகையாகாது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்