‘அவருக்கு ஸ்கேன் எடுத்திருக்கோம்’!.. பீல்டிங் செய்தபோது ஏற்பட்ட எதிர்பாராத காயம்.. பிசிசிஐ முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 98 ரன்கள் எடுத்து, 2 ரன்னில் சதத்தை நழுவவிட்டார். இதனை அடுத்து கேப்டன் கோலி 56 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் கே.எல்.ராகுல் 62 ரன்களும், க்ருணல் பாண்ட்யா 58 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனை அடுத்து 318 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 42.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 94 ரன்களும், ஜேசன் ராய் 46 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் க்ருணல் பாண்ட்யா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இப்போட்டியில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் முதல் இன்னிங்ஸின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் வீசிய 4-வது ஓவரில், ரோஹித் ஷர்மாவின் வலது முழங்கையில் பந்து பலமாக விழுந்தது. இந்த காயம் காரணமாக இங்கிலாந்து பேட்டிங் செய்தபோது அவர் பீல்டிங் செய்ய வரவில்லை.

அதேபோல் 2-வது இன்னிங்ஸில் 8-வது ஓவரின் போது பீல்டிங் செய்துகொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிர்பாராதவிதமாக இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி அதிகமாக இருந்ததால் அவர் பாதியிலேயே வெளியேறினார். இதனால் இவர்கள் இருவருக்கும் பதிலாக சுப்மன் ஹில் மற்றும் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்தனர்.

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்து பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. அதில், போட்டியின் 8-வது ஓவரில் பீல்டிங் செய்துகொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்