தோனி, ரெய்னாவுக்கு ‘கொக்கி’ போட துடிக்கும் அணிகள்.. ‘சத்தமில்லாமல்’ நடக்கும் பேச்சுவார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரை பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு நடப்பது தாமதமாகி வந்த நிலையில், வரும் டிசம்பர் 2-வது வாரத்தில் போட்டிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இந்த ஆண்டு பிபிஎல் தொடரில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துவதற்காக வெளிநாட்டு வீரர்களைச் சேர்க்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு கிரிக்கெட் அணி நிர்வாகமும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் 3 வெளிநாட்டு வீரர்களை வைத்துக்கொள்ள அனுமதித்துள்ளது.

இந்தநிலையில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் தோனி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரை பிக் பாஷ் லீக்கில் விளையாட வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தோனி, ரெய்னா இருவரும் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். யுவராஜ் சிங் கடந்த ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றொரு நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடையில்லை என்பதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பிபிஎல் லீக் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக பேட்டி ஒன்றில் யுவராஜ் சிங் தெரிவித்திருந்தார்.

ஆனால் தோனியும், ரெய்னாவும் ஐபிஎல் அணியில் இடம் பெற்றுள்ளனர். இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளதால் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு பிசிசிஐ தடையில்லா சான்று வழங்குமா என்பது தெரியவில்லை.

தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இருந்து வருகிறார். ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் நிச்சயம் ரெய்னா சிஎஸ்கே அல்லது வேறு எந்த அணிக்கு வேண்டுமானாலும் ஏலம் எடுக்கப்படலாம். அதனால் இருவருக்கும் பிசிசிஐ அனுமதியளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்