VIDEO: ‘பல வருச வலி’!.. பாகிஸ்தான் ஜெயிச்சதும் ‘கண்ணீர்’ விட்டு அழுத நபர்.. யார் இவர்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

துபாய் மைதானத்தில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியே கிடையாது. உலகக்கோப்பை தொடரில் இதுவரை இரு அணிகளும் 12 தடவை மோதியுள்ளன. அதில் ஒன்றில் கூட பாகிஸ்தான் வென்றது கிடையாது. அப்படி உள்ள சூழலில் நேற்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் வெற்றி பெற்றதும், ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அந்த நபர் யார்? என்ற கேள்வியும் எழுந்தது. தற்போது அவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் தந்தை சித்திக் என்பது தெரியவந்துள்ளது.

சித்திக் கண்கலங்கிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ஒருவர், ‘இது பாபர் அசாமின் தந்தை. இவரை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பாபர் பாகிஸ்தான் அணிக்குள் வருவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன் 2012-ல் இவரை நான் பார்த்தேன். அப்போது, பாபர் மட்டும் பாகிஸ்தான் அணிக்குள் வரட்டும், அதன்பின் மொத்த மைதானமும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று கூறினார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய போட்டியில் 68 ரன்கள் எடுத்த பாபர் அசாம், கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வானும் 79 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்