ஐபிஎல்லில் அசத்திய 2 இளம் வீரர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.. பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்கள் இருவரை டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு நெட் பவுலராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2021) தொடர் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணியும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் ஆவேஷ் கான் (Avesh Khan) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer) ஆகிய இருவரை டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு நெட் பவுலர்களாக பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

இதில் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதல் அற்புதமாக பந்து வீசி வருகிறார். குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ஆவேஷ் கான் (23 விக்கெட்டுகள்) இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். முதலில் இந்தியாவில் நடைபெற்ற முதற்கட்ட ஐபிஎல் தொடரில் இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடரில் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் தொடக்க ஆட்டக்காரராக (8 போட்டிகளில் விளையாடி 265 ரன்கள்) களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு வெங்கடேஷ் ஐயர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். அதேபோல் பவுலிங்கிலும் அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் 15-ம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி முடிவடைந்ததும், இரு வீரர்களும் இந்திய அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை நெட் பவுலராக தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்