VIDEO: ‘என்ன இப்படி அவுட்டாகிட்டு போறாரு’!.. டி20 உலகக்கோப்பை டீம்ல நீங்க இருக்குறது ஞாபகம் இருக்கா..? சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது.

ஐபிஎல் (IPL) தொடரின் 46-வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும், ரிஷப் பந்த் (Rishabh Pant) தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மாவும், டி காக்கும் களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அப்போது அக்சர் படேல் வீசிய 7-வது ஓவரில் அன்ரிச் நார்ட்ஜேவிடம் கேட்ச் கொடுத்து டி காக் (19 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனை அடுத்து சூர்யகுமார் யாதவும் 33 ரன்களில் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து வந்த சௌரவ் திவாரியும் 15 ரன்களில் வெளியேறினார்.

இதனால் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மும்பை அணி பறிகொடுத்தது. இந்த இக்கட்டான சமயத்தில் பொல்லார்டும், ஹர்திக் பாண்ட்யாவும் களமிறங்கினர். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எனும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்ரிச் நார்ட்ஜே ஓவரில் பொல்லார்டு (6 ரன்கள்) போல்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஆவேஷ் கான் (Avesh Khan) ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவும் (Hardik Pandya) போல்டாகி ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி, 19.1 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 26 ரன்களும் எடுத்தனர். அதேபோல் 8-வது வீரராக களமிறங்கிய அஸ்வின் 20 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோல்வியடைந்ததை அடுத்து, பலரும் அந்த அணியை விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இவர்கள் மூவரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சூழலில், நடப்பு ஐபிஎல் தொடரில் இவர்கள் மூவரும் பெரிய அளவில் ரன்களை எடுக்கவில்லை. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். தற்போது விளையாடி வரும் அவர், பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார். ஒருமுறை கூட பவுலிங் செய்யவில்லை.

அதிலும் நேற்றைய போட்டியில், அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது ஆவேஷ் கான் ஓவரில் ஹர்திக் பாண்ட்யா போல்டானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னும் டி20 உலகக்கோப்பை நடைபெற சில வாரங்களே உள்ள நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் அதிர்ச்சியளித்து வருவதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்