'அந்த நாளுக்காக... பல வருஷமா தவம் இருக்கோம்!.. இப்படி பண்ணிட்டீங்களே'!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா பெருந்தொற்று காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் ஏமாற்றம் நீங்குவதற்குள், ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி வந்துள்ளது.

ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால், சில அரசியல் காரணங்களுக்காக தொடர் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஆசிய கோப்பை தொடரை இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைத்தது ஐசிசி. ஆனால், இலங்கையில் இப்போது கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (மே 19) மட்டும் ஒரேநாளில் 3,623 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை நாட்டை பொறுத்தவரை இந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை என்பது மிக மிக அதிகம். இந்த இக்கட்டான சூழலில் தான் ஆசிய கோப்பைத் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஆஷ்லே டி சில்வா, "கோவிட் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஆசியக் கோப்பை தொடரை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஒருமனதாக இந்த முடிவினை எடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கவிருந்தன. இலங்கையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அடுத்த 10 நாட்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, கொரோனா தொற்று பரவல் குறைந்து நிலைமை சகஜ நிலைமைக்கு திரும்பினால் கூட, 2023ல் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை வரை, ஆசிய கோப்பை தொடரை நடத்த வாய்ப்பில்லை.

ஏனெனில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து நாடுகளுக்கான schedule நிரம்பி வழிகின்றன என்று கூறியுள்ளார். எனினும், 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு நடத்தலாமா என்பது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக பின்னர் வெளியிடப்படும் என்று தெரிகிறது. 

கடந்த முறை, 2018-ம் ஆண்டில் ஆசியக் கோப்பை துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைத் வென்றது.  

இதற்கிடையே, இந்த தொடர் ரத்து செய்யப்பட்டதில் பெரிதும் ஏமாற்றம் அடைந்தது இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் தான். இந்த ஆசிய கோப்பையிலாவது இந்தியா - பாகிஸ்தான் மோதுவதை பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்ளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்