இவர எப்போ டீம்ல சேர்த்தாங்க..? ‘மாஸ்க்’ போட்டு மைதானத்துக்குள் ஓடி வந்த ‘சேட்டை’ நபர்.. ஸ்மைலி எமோஜியோடு ‘அஸ்வின்’ போட்ட கலக்கல் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்தபோது பேட்டுடன் மைதானத்துக்குள் வந்த நபரால் கலகலப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 423 ரன்களை குவித்தது.

அதில் அந்த கேப்டன் ஜோ ரூட் 121 ரன்களும், டேவிட் மாலன் 70 ரன்களும் எடுத்து அசத்தினர். அதேபோல் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹசீப் ஹமீது 68 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும் எடுத்தனர்.

தற்போது இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 59 அடித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக புஜாரா மற்றும் கேப்டன் விராட் கோலி ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் புஜாரா 91 ரன்களும், விராட் கோலி 45 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனை அடுத்து இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ராபின்சன் ஓவரில் புஜாரா அவுட்டானார். இவரைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும் (55 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானேவும் 10 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். தற்போது ரிஷப் பந்தும், ஜடேஜாவும் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில், ரோஹித் ஷர்மா அவுட்டானதும் ஜார்வோ என்ற நபர் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்துகொண்டு பேட்டிங் செய்ய வந்தார். இதனால் மைதானத்தில் ரசிகர்களிடையே கலகலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அவரை வெளியேற்றினர்.

இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இன்றைய ஆட்டம் சிறப்பாக இருந்தது. ரோஹித் ஷர்மா, புஜாரா, விராட் கோலி மற்றும் ஜார்வோ ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். ஜார்வோ, இப்படி செய்வதை நிறுத்துங்கள்’ என ஸ்மைலி எமோஞ்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின்போதும் இதேபோல் ஒரு செயலில் ஜார்வோ ஈடுபட்டார். அதில் இந்திய அணி வீரர்கள் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஜார்வே திடீரென மைதானத்துக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்வோ செய்யும் செயல் நகைச்சுவையாக இருந்தாலும், தொடர்ந்து இரண்டு முறை எப்படி மைதானத்துக்குள் நுழைந்தார்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபோன்று நடப்பதை தடுக்க அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்