அஸ்வின் இப்படியொரு விளக்கத்தை கொடுப்பாருன்னு யாருமே நெனச்சிருக்க மாட்டாங்க.. இதைப் படிச்சா மோர்கனே ‘மிரண்டு’ போயிருவாரு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனுடன் சண்டையிட்டது குறித்து அஸ்வின் விரிவான விளக்கமளித்துள்ளார்.

இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று முன்தினம் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கனுக்கும் (Eoin Morgan), டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கும் (Ashwin) இடையே மோதல் ஏற்பட்டது. அதற்கு காரணம், வெங்கடேஷ் ஐயர் வீசிய ஓவரில், ரிஷப் பந்த் அடித்துவிட்டு ஒரு ரன்னுக்கு ஓடினார். அப்போது ராகுல் திரிபாதி த்ரோ செய்த பந்து ரிஷப் பந்தின் மேல் பட்டுச் சென்றது. உடனே ரிஷப் பந்தை அஸ்வின் இரண்டாவது ரன்னுக்கு அழைத்து ஓடினார்.

இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு எதிரான என இயான் மோர்கன், அஸ்வினிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. உடனே ஓடி வந்த தினேஷ் கார்த்திக், அஸ்வினை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பினார். இந்த விவகாரம் பூதாகாரமாக வெடிக்கவே, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே, அஸ்வினின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இயான் மோர்கன் குறித்த சர்ச்சைக்கு அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். அதில்,  ‘1. பீல்டர் பந்தை த்ரோ செய்துவிட்டார் என்பது தெரிந்ததுமே நான் ஓடத் தொடங்கிவிட்டேன். ரிஷப் பந்த் மீது பந்து பட்டுச் சென்றது எனக்கு தெரியாது.

2. ஒருவேளை ரிஷப் பந்த் மீது பந்து பட்டுச் சென்றது தெரிந்திருந்தால் நான் ஓடியிருப்பேனா? நிச்சயம் ஓடியிருப்பேன். ரூல்ஸில் அதற்கு இடம் இருக்கிறது.

3. இயான் மோர்கன் சொன்னதுபோல் நான் அவமானப்பட வேண்டியவனா? கண்டிப்பாக இல்லை.

4. நான் சண்டை போட்டேனா? இல்லை, நான் எனக்காக நின்றேன். என் ஆசிரியர்களும், பெற்றோரும் நான் குழந்தையாக இருக்கும்போது இதை எனக்கு கூறியுள்ளனர். அதைதான் தற்போது நான் செய்தேன். இயான் மோர்கனோ, டிம் சவுத்தியோ அவர்களுக்கு நியாயம் என நினைப்பதை செய்யலாம். ஆனால் அவர்கள் தான் உயர்ந்தவர்கள் என நினைத்துக்கொண்டு அவமானகாரமான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதில் யார் நல்லவர், கெட்டவர்? என சிலர் விவாதம் செய்கின்றனர். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என சொல்லும் ரசிகர்களுக்கு ஒன்று சொல்கிறேன், கிரிக்கெட்டை எங்கள் கெரியராக நினைத்து நாங்கள் விளையாடி வருகிறோம்.

கிரிக்கெட்டில் ஒருவர் தவறாக செய்யும் த்ரோ மூலம் கிடைக்கும் கூடுதல் ரன் உங்கள் கெரியரை உருவாக்க வாய்ப்புள்ளது. அதேபோல் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் நிற்பவர்கள், பந்துவீசும் முன் சில தூரம் ஓடினால் (மான்கட் சர்ச்சை) உங்கள் கெரியர் காலியாகவும் வாய்ப்புள்ளது. நீங்கள் ரன் ஓடவில்லை என்றாலோ, நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் உள்ளவரை எச்சரிக்கை செய்வில்லை என்றாலோ ஒருவர் நல்லவர் எனக் குழப்பிக் கொள்ள கூடாது.

நல்லவர், கெட்டவர் என்று சான்றிதழ் கொடுப்பவரக்ள் எல்லாம், தங்கள் வாழ்க்கையில் ஏற்கனவே சாதித்துவிட்டனர். மைதானத்தில் விளையாடும்போது விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ளுங்கள். போட்டி முடிந்த பின் இருவரும் கைகுலுக்கி விட்டு செல்லுங்கள். அதுதான் ஸ்ப்ரிட் ஆஃப் கிரிக்கெட்’ என அஸ்வின் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த நீண்ட நெடிய விளக்கத்தின் மூலம் தன்னை விமர்சித்தவர்களுக்கு அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்