‘என்னய்யா விளையாடுறீங்க’!.. ‘படத்துல போர் அடிக்குற சீனை ஓட்டி விட்ற மாதிரி இருக்கு உங்க பேட்டிங்’.. மிகக் கடுமையாக சாடிய சேவாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆட்டம் வர வர சோர்வடைய வைப்பதாக சேவாக் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 25-வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ரானா மாற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

இதில் நிதிஷ் ரானா 15 ரன்களில் அவுட்டாக, அடுத்த வந்த ராகுல் திருப்பதியும் 19 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் இயான் மோர்கன் மற்றும் சுனில் நரேன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனால் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்தது.

இந்த சமயத்தில் களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரசல் 45 ரன்களும், சுப்மன் கில் 43 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியைப் பொறுத்தவரை அக்சர் படேல் மற்றும் லதித் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 16.3 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ப்ரீத்வி ஷா 82 ரன்களும், ஷிகர் தவான் 46 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த நிலையில் Cribuzz சேனலில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், ‘என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. நாம் எதாவது படம் பார்க்கிறோம், அதில் போர் அடிக்கும் வகையில் காட்சிகள் வந்தால் உடனே ஓட்டிவிடுகிறோம். அதேபோல்தான், ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை கொல்கத்தா அணியின் பேட்டிங் இருக்கிறது. அவர்கள் எல்லோரையும் போர் அடிக்க வைக்கிறார்கள். ஏனென்றால், செய்த தவறையே திரும்ப திரும்ப செய்துக் கொண்டு இருக்கின்றனர்’ என கடுமையாக விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘எதிர்பாராத விதமாக கடந்த போட்டியில் கேப்டன் இயான் மோர்கன் கொஞ்சம் ரன் அடித்துவிட்டார். ஆனாலும் முன்பு செய்த தவறுகளையே இந்த போட்டியிலும் செய்துள்ளனர். கொல்கத்தா அணி நிர்வாகம் இதுகுறித்து சரியான முடிவை எடுக்குமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் பேட்டிங் ஆர்டரிலாவது மாற்றம் செய்ய வேண்டும்’ என சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்