'எங்கள கைவிட்றாதீங்க ப்ளீஸ்'!.. இழுத்து மூடும் அபாயத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி!.. ஆஸ்திரேலியாவிடம் மன்றாடும் ஆப்கான் கிரிக்கெட் வாரியம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என கடந்த ஆண்டு தோஹாவில் தாலிபான்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள், தூதரக அதிகாரிகள் வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் நிலை, எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

சமீபத்தில், பிபிசி வானொலி நேர்காணலில் பேட்டியளித்த ஆப்கன் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக், "காபூலில் உள்ள தனது அணி வீரர்கள் கண்களில், குரல்களில், பேச்சில் கூட பயம் இருக்கிறது. அவர்கள் (தாலிபான்கள்) எந்த விளையாட்டு வீரரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது" என்று நவீன் கூறியுள்ளார்.

அதேபோல், சமீபத்தில் ட்வீட் செய்திருந்த முன்னாள் ஆப்கன் கேப்டன் முகமது நபி, "நான் உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்; ஆப்கன் ஒரு சிக்கலுக்குள், குழப்பத்திற்குள் செல்வதை தயவுசெய்து தடுத்துவிடுங்கள். எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்" என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தாலிபான் அரசு பொறுப்பேற்றவுடன் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தாலிபான் கலாச்சார கமிஷன் துணைத்தலைவர் வாசிக் கூறும்போது, "ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியின் கீழ் பெண்கள் கிரிக்கெட் மட்டுமின்றி வேறு எந்த விளையாட்டுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் ஆண்கள் கிரிக்கெட்டில் எந்த பிரச்சினையும் இல்லை" என்றார். இந்த நிலையில், "பெண்கள் கிரிக்கெட்டுக்கு தாலிபான் தடை விதித்தால் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வோம்" என்று ஆஸ்திரேலியா எச்சரித்தது.

ஏனெனில், ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நவம்பர் 27ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட்டில் நடைபெறுகிறது. இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய அளவில் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சியை ஊக்குவிப்பது முக்கியமானது. கிரிக்கெட்டுக்கான எங்கள் பார்வை என்னவென்றால் இது எல்லோருக்கும் பொதுவான ஒரு விளையாட்டு. நாங்கள் எல்லா மட்டத்திலும் இந்த விளையாட்டை ஆதரிக்கிறோம்.

மகளிர் கிரிக்கெட்டை ஆதரிக்க முடியாது என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்ததாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. தாலிபான்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதித்தால், ஆப்கானிஸ்தான் உடனான டெஸ்ட் போட்டியை ரத்து செய்வோம். இதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை" என்று கூறினார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் தலைமை செயல் அதிகாரி ஹமீத் ஷின்வாரி உருக்கமுடன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆப்கானிஸ்தானின் கலாச்சாரம் மற்றும் மதச் சூழலை மாற்றும் சக்தி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு இல்லை. தயவுசெய்து எங்களுக்காக கதவை திறந்து வையுங்கள்.

எங்களுடன் வாருங்கள். மற்ற நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போல் நடவடிக்கை எடுத்தால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் உலக கிரிக்கெட்டிலிருந்து அந்நியப்படும். எங்கள் நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சி தடைபடும். அதுமட்டுமின்றி, ஆப்கானிஸ்தானில் இருந்தே கிரிக்கெட் காணாமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம் என்று சின்வாரி கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்