'ஐபிஎல்' போட்டிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய 'சிக்கல்'?.. "யாரு என்ன பண்ணாலும் சரி, எல்லாம் கரெக்ட்டா நடக்கும்.. 'பிசிசிஐ' அதிகாரி சொன்ன 'தகவல்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், போட்டி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தவுள்ளதாக பிசிசிஐ, சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. ஆனால், ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது, சில அணிகளுக்கு பெரிய பிரச்சனையாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து அணி நிர்வாகம், தங்களது அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவலை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. அதே போல, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில அணிகளுக்கும் அந்த சமயத்தில் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல், அக்டோபர் மாதத்தில், டி 20 உலக கோப்பை போட்டிகளும் நடைபெறவுள்ளதால், மற்ற அணிகள், தங்களது வீரர்களை தொடர்ந்து விளையாட வைக்கவும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

மேலும், வெளிநாட்டு வீரர்கள் இல்லமால் போனால், அது சிஎஸ்கே, ராஜஸ்தான் உள்ளிட்ட சில அணிகளை நிச்சயம் பெரிய அளவில் பாதிக்கும். இந்நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா (Rajeev Shukla), வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்காமல் போவது பற்றி, தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

'வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாதது பற்றி ஆலோசித்து வருகிறோம். எங்களது ஒரே குறிக்கோள், இந்த ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்த வேண்டும் என்பது தான். அதனை பாதியில் நிறுத்தி விட முடியாது. எந்த வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டாலும் நல்லது தான். ஆனால், அதே நேரத்தில் எந்த வெளிநாட்டு வீரர் இடம்பெறாமல் போனாலும், நாங்கள் தொடரை நிறுத்தப் போவதில்லை.

இந்திய வீரர்களும், சில வெளிநாட்டு வீரர்களும் இருப்பார்கள். அனைத்து அணிகளும், நிச்சயம் மற்ற வீரர்களை தேர்ந்தெடுக்கும். யார் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் ஐபிஎல் 2021 நடக்கும். இது தான் எங்கள் கொள்கை' என ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

தொடர்ந்து, மீதமுள்ள போட்டிகளுக்கான ஐபிஎல் அட்டவணை தயாராவது பற்றிப் பேசிய ராஜீவ் சுக்லா, 'நான் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் வந்து விட்டேன். இன்னும் சில தினங்களில், ஐபிஎல் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிலரும் வந்து விடுவார்கள். அதன் பிறகு, இங்குள்ள கிரிக்கெட் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, அதனைப் பொறுத்து ஐபிஎல் அட்டவணை தயார் செய்யப்படும். கடந்த ஆண்டு, ஐபிஎல் இங்கே சிறப்பாக நடைபெற்றது போன்று இந்த முறையும் நடைபெறும்' என ராஜீவ் சுக்லா கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்