தமிழக கிரிக்கெட் அணியை கிண்டலடித்த விமர்சகர்.. பதிலடி கொடுத்த அபினவ் முகுந்த், அஸ்வின்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடர் தற்போது இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணிக்கு பாபா இந்திரஜித் தலைமை தாங்கி வருகிறார். குரூப் சி யில் தமிழ்நாடு அணி இடம்பெற்றிருந்த நிலையில், 7 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் வகித்ததுடன் தற்போது காலிறுதி சுற்றுக்கும் முன்னேறி உள்ளது.

Advertising
>
Advertising

முன்னதாக, தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், தமிழ்நாடு அணி இளம் வீரர் ஜெகதீசன் பல சாதனைகளை படைத்திருந்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்திருந்தது. லிஸ்ட் ஏ போட்டியில் ஒரு அணி 500 ரன்களுக்கு மேல் எடுத்தது இது தான் முதல் முறை.

அதே போல தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் சேர்த்தனர். சாய் சுதர்சன் 154 ரன்களும், ஜெகதீசன் 277 ரன்களும் எடுத்தனர். நடப்பு விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்துள்ள ஜெகதீசன், தொடர்ச்சியாக லிஸ்ட் ஏ போட்டியில் ஐந்து சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெயரையும் பெற்றார். மேலும் அவர் அடித்த 277 ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகவும் பதிவாகி உள்ளது.

விஜய் ஹசாரே தொடரில் ஆதிக்கம் செலுத்தி அதிகபட்சமாக ஐந்து முறை தமிழ்நாடு அணி கோப்பையை வென்றுள்ளது. இந்த முறையும் அவர்கள் பட்டையைக் கிளப்பி வருவதால் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு அணி விஜய் ஹசாரே தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில் மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வல்லுநர் மகராண்ட் வைய்ங்காங்கர், மறைமுகமாக தமிழ்நாடு அணியை குறித்து கூறிய கருத்தும், அதற்கு தமிழக கிரிக்கெட் வீரர்களான அபினவ் முகுந்த் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கொடுத்த ரிப்ளையும் பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

இது தொடர்பாக மகராண்ட் வைய்ங்காங்கர் தனது ட்வீட்டில், "88 ஆண்டுகள் ரஞ்சி கிரிக்கெட் கோப்பை வரலாற்றில் தமிழ்நாடு அணி இரண்டு முறை தான் கோப்பையை கைப்பற்றியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். இதனை கவனித்த தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் "20 வருட விஜய் ஹசாரே தொடர் வரலாற்றில் தமிழ்நாடு அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது" என பதிலடி கருத்தை கமெண்ட் செய்திருந்தார்.

இதில் மீண்டும் கமெண்ட் செய்த மகராண்ட் வைய்ங்காங்கர், "நான் நேஷனல் சாம்பியன்ஷிப் பற்றி பேசுகிறேன்" என பதில் சொன்னார். அப்போது ரசிகர் ஒருவர், விஜய் ஹசாரே என்ன மார்ஸில் (Mars) வைத்தா நடக்கிறது?" என குறிப்பிட்டிருந்தார்.

அபினவ் முகுந்த் பதிலடி கொடுத்தது போல, மகராண்ட் வைய்ங்காங்கர் கருத்துக்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் சில பதில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

"ரஞ்சிக்கோப்பைத் தொடரில் அதிக முறை கோப்பையை வென்றுள்ள மும்பை அணி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் விஜய் ஹசாரே நடக்கும்போது ரஞ்சிக்கோப்பை பற்றி ஏன் பேச வேண்டும்?. அப்படி பேசி ஏன் ஜெகதீசன் சந்தோஷத்தில் மண் அள்ளி போடுகிறீர்கள்?. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக சென்று விடுங்கள். அபினவ் முகுந்த் கொடுத்துள்ள பதிலடி எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

RAVICHANDRAN ASHWIN, ABHINAV MUKUND, TAMILNADU, VIJAY HAZARE TROPHY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்