‘இந்தியாவுக்கு எதிரான சீரிஸ்ல நாங்க விளையாட மாட்டோம்’!.. திடீரென ‘போர்கொடி’ தூக்கும் 5 இலங்கை வீரர்கள்.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டோம் என 5 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் போர்கொடி தூக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஏ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இதனை அடுத்து அனைத்து வீரர்கள் மும்பையில் சில நாட்கள் பயோ பபுளில் தங்க வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி இந்திய அணி இலங்கைக்கு சென்றது. தற்போது அங்கும் சில நாட்களுக்கு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டோம் என, விஸ்வா ஃபெர்னாண்டோ, லசித் எம்புள்டேனியா, லஹிரு குமாரா, அசென் பண்டாரா, கசுன் ரஞ்சிதா ஆகிய 5 இலங்கை வீரர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர். மேலும் பயோ பபுளில் தங்கியிருந்த அறைகளையும் காலி செய்துவிட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காரணம், சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு வழங்கும் ஊதிய முறையில் கொண்டு வந்த மாற்றம் தான் என சொல்லப்படுகிறது. அதாவது, வீரர்களின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதனால் இந்த பிரச்சனை முடியும் வரை ஒவ்வொரு தொடருக்கும் தனித்தனியாக ஒப்பந்தம் போட இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அந்த வகையில் தற்போது நடைபெற உள்ள இந்தியா தொடருக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட 5 இலங்கை வீரர்கள் மறுத்துள்ளனர்.

சமீப காலமாக இலங்கை கிரிக்கெட் அணி மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது விளையாடி வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க பயோ பபுள் விதிகளை மீறியதாக 3 சீனியர் வீரர்களுக்கு ஒரு வருடம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென 5 வீரர்கள் விளையாட மாட்டோம் என போர்கொடி தூக்கியிருப்பது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்