'9 வருஷம் ஆயிடுச்சு... இப்ப கூட அந்த மேட்ச் கண்ணுக்குள்ளயே இருக்கு!'... ரசிகர்களை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்த... 2011 உலகக் கோப்பை ஃபைனல்... ஒரு குட்டி ரீ-வைண்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி தலைமையிலான இந்திய அணி 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று இன்றோடு 9 ஆண்டுகள் முடிந்துவிட்டது. 90s கிட்ஸ் வாழ்வில் மறக்கமுடியாத கிரிக்கெட் அனுபவங்களை அள்ளி வழங்கிய அந்த இறுதிப்போட்டியின் ஸ்வாரஸ்யமான நிகழ்வுகள் பற்றிய செய்தி தொகுப்பு.

2007ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மிக மோசமாக விளையாடியது. இதனால், ஆரம்பக் கட்டத்திலேயே வெளியேற வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. ஆனால், அதே ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று, இந்திய ரசிகர்களுக்கு புத்துயிர் அளித்தது.

அந்த உத்வேகம் தான், 2011 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை மிக வலுவாகத் தயார்படுத்தியது. சச்சின், விரேந்திர சேவாக், கம்பீர், கோலி என டாப் ஆர்டரை தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் அலங்கரித்தனர். அதைத் தொடர்ந்து, யுவராஜ் சிங், தோனி, ரெய்னா, யூசுஃப் பதான் என மிடில் ஆர்டரும் பக்காவாக பொருந்தியது. ஜாகிர் கான், முனாஃப் பட்டேல், ஸ்ரீசாந்த், ஹர்பஜன், அஷ்வின் என பௌலிங் கட்டமைப்பும் வலுவாகவே எழுப்பப்பட்டது. இதில், ஆல் ரவுண்டராக யுவராஜ் சிங் துருவநட்சத்திரமாக ஜொலித்தார்.

ஏப்ரல் 2, 2011... இந்தியா-இலங்கை இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களை இலங்கை அணி குவித்திருந்தது. இதில், ஜெயவர்த்தனே சதம் அடித்திருந்தார்.

அடுத்ததாக பேட்டிங் செய்ய களம் கண்ட இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. எளிதில் உடைக்க முடியாத ஓப்பனிங் கூட்டணியை, சச்சினையும் சேவாக்கையும் வைத்து இந்திய அணி உருவாக்கியிருந்தது. ஆனால், காலம் வேறு கணக்கை வைத்திருந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே சேவாக் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் வெறும் 18 ரன்களில் ஆட்டமிழந்த போது, 31 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இந்திய அணி திணறிக்கொண்டிருந்தது. ஆனால் மறுமுனையில், சோர்ந்து போயிருந்த இந்திய ரசிகர்களுக்கு, தன்னுடைய நிதானமான ஆட்டத்தினால் நம்பிக்கை கீற்றுகளை வெளிப்படுத்திவந்தார், கம்பீர்.

முயற்சி என்பது முடிந்தவரை செய்வது அல்ல எடுத்த காரியம் முடியும் வரை செய்வது. அதை 2011 இறுதிப்போட்டியில் சரியாகச் செய்தார் தோனி. 114 ரன்களுக்கு 3 விக்கெட்கள் போய்விட அடுத்து யுவராஜ் வருவார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்க, யாரும் எதிர்பாராவிதமாக மகேந்திர சிங் தோனி உள்ளே வந்தார். ஸ்பின்னர்கள் பெளலிங் போட்டுக்கொண்டு இருக்கும்போது Left /Right hand காம்பினேஷன் சரியாக இருக்கும் என்று யுவிக்கு முன்னால் களம்கண்டார் தோனி. மேலும், முரளிதரனை யுவராஜைவிட தன்னால் நன்றாகச் சமாளித்து ஆட முடியும் என்று எண்ணியவர் அதைக் களத்தில் நிரூபிக்கவும் செய்தார்.

எடுத்த காரியத்தை கம்பீருடன் சேர்ந்து கச்சிதமாகச் செய்தார். அவர் அடித்த வின்னிங் ஷாட் சிக்ஸ்தான் இந்திய கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் இளைய சமுதாயத்துக்கு உந்துசக்தி. சாகும் தறுவாயில்கூட நான் கடைசியாகப் பார்க்க ஆசைப்படுவது தோனி அடித்த அந்த சிக்ஸர்தான் என்று கவாஸ்கரையே சொல்ல வைத்தது.

"Dhoni finishes off in style. A magnificent strike into the crowd! India lift the World Cup after 28 years!” இப்போது இந்தக் கமென்ட்ரியோட அந்த வீடியோவைப் பார்த்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெரிதாக சாதித்த மகிழ்ச்சி கிடைக்கும்.

இந்த வெற்றி, ஒருவரின் தனிப்பட்ட வெற்றி அல்ல; குழுவின் வெற்றி, அணி வீரர்கள் அனைவரின் வெற்றி; ரசிகர்களின் வெற்றி; ரசிகர்களுக்கான வெற்றி; ஒட்டு மொத்த இந்தியாவுக்கான வெற்றி; கிரிக்கெட்டை உயிர் மூச்சாக சுவாசிக்கும் கிரிக்கெட் விரும்பிகளின் வெற்றி!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்