'உயிர் போகும் தருணத்தில்’... ‘நெருங்கிய நண்பனுக்கு ஃபோன் செய்து’... ‘கடைசி உதவி கேட்ட இளைஞர்’... 'மனதை உருக்கிய சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் நடந்த தீ விபத்தின்போது தான் சாகப் போகிறோம் என்பதை அறிந்த இளைஞர் ஒருவர், தனது நண்பனுக்கு ஃபோன் செய்து கேட்ட உதவி கண்ணீரை வரவழைத்துள்ளது.

டெல்லி ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டியில் 4 மாடிகள் கொண்ட பைகள் தயாரிக்கும் சிறிய ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் குறைந்த கூலியில், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் அங்கேயே தங்கி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாலை 5.22 மணியளவில் முதல் தளத்தில் தீ பிடித்தது. இதில் 2-வது தளத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தீ விபத்தில் சிக்கியதில் 43 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முசாரஃப் அலி (32) என்ற இளைஞர், தப்பிக்க வழியில்லை என்று தெரிந்ததும், தனது நண்பன் ஷோபித்துக்கு கடைசியாக ஃபோன் செய்த 7 நிமிட ஆடியோ கிளிப் வைரலாகி மனதை நெருட வைத்துள்ளது. அதில், 'பிரதர் நான் சாகப் போகிறேன். பேசுவதற்கு கொஞ்ச நேரமே உள்ளது. எனது குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள். நீ மட்டும் தான் இப்போது அவர்களுக்கு இருக்கிறாய். இங்கு உதவி செய்ய யாரும் இல்லை. என்னால் மூச்சுவிடகூட முடியவில்லை. என்னுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்.

என்னுடைய குடும்பத்திடம் உடனடியாக கூறிவிடாதே, அவர்கள் பயந்து போவார்கள். பெரியோர்களிடம் ஆலோசித்து விட்டு அதன்பிறகு கூறு. இங்கே நான் தப்பிக்க ஒரு வழியும் இல்லை. இதுதான் கடைசி பேச்சு. இங்கே உதவி செய்ய யாரும் இல்லை’ என்று இவ்வாறாக உருக்கமாக கூறிய பின்பு, தனது உயிரை விட்டுள்ளார்.  இதுகுறித்து முசாரஃப் நண்பர் சோபித் கூறுகையில், அதிகாலையிலேயே நண்பரிடம் இருந்து போன் வந்ததும், ஃபோனை எடுத்தபோது, மரண ஓலம் கேட்டதால் அதிர்ந்துபோய் என்னவென்று கேட்டேன்.

‘அவன் தான் பிழைக்க முடியாது என்று தெரிந்ததும், தனது குடும்பத்தை பார்த்துக் கொள்ளுமாறு கூறினான். அங்கிருந்து எப்படியாவது குதித்துவிடு என்று அவனிடம் கூறினேன். ஆனால், அதற்கு அங்கு வழியில்லை என்று அவன் கூறினான். தைரியமாக இரு, உனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறினேன். அப்போது தீயணைப்பு வண்டி வரும் சத்தம் கேட்டது. பின்னர் லைன் கட்டாகி விட்டது. கடைசியில் நண்பனை, சடலமாகத் தான் பார்த்தேன். சிறு வயதில் இருந்தே நண்பர்களாகிய நாங்கள், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தான், இருவரும் ஒரு திருமண விழாவில் சந்தித்து கொண்டு பேசினோம்.

அதுவே எங்கள் கடைசி சந்திப்பாக இருக்கும் என சற்றும் நினைக்கவில்லை. நான் ஒரு சகோதரனை இழந்துவிட்டேன், அவருடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திலேயே இனி நான் வாழ்வேன்’ என்று கண்ணீர் மல்கக் கூறினார். தீ விபத்தில் இறந்த முசாரஃப் அலிக்கு, 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். எல்லாரும் 5 வயதிற்கு குறைவானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், இந்த தீ விபத்தில் 3, 4 பேரை காப்பாற்றிய அண்ணன் ஒருவர், தன் தம்பியை காப்பாற்ற முடியாமல் கதறித் துடித்தது மனதை உருக்கியுள்ளது.

FIRE, ACCIDENT, VICTIM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்