‘முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கிய ஸ்விகி கோ’.. ‘செல்ஃபோனை டெலிவரி செய்ய பதிவு செய்த’.. ‘பெண்ணிற்கு நடந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஸ்விகி கோ வாடிக்கையாளர் சேவை மையம் என நினைத்து தவறான எண்ணிற்கு அழைத்த பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி புதிதாக பிக் அப், டிராப் சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஸ்விகி கோ என்னும் இந்த சேவை மூலம் நகரின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை அனுப்பலாம். இந்தியாவில் இந்த சேவை கடந்த 4ஆம் தேதி பெங்களூரில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த அபர்ணா தாக்கர் சுரி (47) என்பவர் தனது செல்ஃபோன் ஒன்றை விற்பதற்காக ஓஎல்எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த பிலால் என்ற நபர் அவரைத் தொடர்பு கொண்டு அந்த செல்ஃபோனை வாங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பிலாலிடம் செல்ஃபோனை கொண்டு சேர்க்க அபர்ணா ஸ்விகி கோ சேவையில் பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் சரியான முகவரியை அளிக்காததால் அந்த செல்ஃபோன் டெலிவரி செய்யப்படாமல் இருந்துள்ளது.

இதையடுத்து அவர் ஸ்விகி கோ டெலிவரி நபரை தொடர்பு கொண்டபோது அவர் அந்த செல்ஃபோன் ஸ்விகி அலுவலகத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பின்னர் செல்ஃபோனை பெறுவதற்காக அபர்ணா ஸ்விகி கோ வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொள்ள முயற்சித்து கூகுளில் அதன் சேவை எண்ணைத் தேடியுள்ளார். அதில் அவருக்கு கிடைத்த ஒரு எண்ணிற்கு அழைத்து அவர் நடந்ததைக் கூறியுள்ளார்.

அப்போது அபர்ணாவிடம் பேசிய நபர் அவருடைய செல்ஃபோனிற்கு ஒரு லிங்க் வரும், அதன்மூலம் ஆர்டர் செய்தால் பொருள் உரிய இடத்திற்கு டெலிவரி செய்யப்படும் எனக் கூறியுள்ளார். அவர் கூறியபடி ஆர்டர் செய்ய முயற்சித்தபோது அதில் அபர்ணாவின் வங்கிக்கணக்கு விவரம், யுபிஐ ஐடி ஆகியவை கேட்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களைக் கொடுத்த சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 95 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அபர்ணா இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றிப் பேசியுள்ள ஸ்விகி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், “அபர்ணா ஸ்விகி கோ வாடிக்கையாளர் மையம் என நினைத்து தவறான எண்ணுக்கு அழைத்ததாலேயே ஏமாற்றப்பட்டுள்ளார். அவர் டெலிவரி செய்ய கொடுத்த முகவரி சரியாக இல்லாததால்தான் எங்களால் அதை டெலிவரி செய்ய முடியவில்லை. மேலும் அவர் டெலிவரிக்காக பதிவு செய்த செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்தாமல் வேறு எண்ணை பயன்படுத்தி வந்ததால் அவரை எங்களால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ஸ்விகி நிறுவனம் எப்போதுமே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரத்தை கேட்காது என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SWIGGY, SWIGGYGO, CELLPHONE, FOOD, DELIVERY, BANGALORE, WOMAN, CHEATING, MONEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்