“சூட்கேஸில் இளம் பெண்ணின் சடலம்!.. அடையாளம் காட்டிய தாய்... கணவர் கைது.. போலீஸாருக்கு பரிசு!”.. எல்லாம் முடிந்து த்ரில்லர் பட பாணியில் கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ‌


அப்பெண்ணின் அடையாளங்களை போலீசார் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து அலிகரை சேர்ந்த தாய் ஒருவர் அந்த சடலம் காணாமல் போன தனது 25 வயது மகள் வாரிஷாவின் சடலம் என அடையாளம் காட்டினார். மேலும் தனது மகளை அவரது மாமியாரும் கணவரும் கொடுமைப்படுத்தியதாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வாரிஷாவின் கணவரும், மாமியாரும் கடந்த 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த கொலையை கண்டுபிடித்ததற்காக காஸியாபாத் போலீசார் குழுவிற்கு 15,000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் வாரிஷா உயிருடன் திரும்பி வந்து போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அப்பகுதி பேருந்து நிலையத்தில் ஒரு லேடி கான்ஸ்டபிளை அணுகிய வாரிஷா, கடந்த ஜூலை 24ஆம் தேதி தனது கணவரால், தான் தாக்கப்பட்டதாகவும், அதன்பிறகு கணவரை விட்டுவிட்டு நொய்டாவுக்குச் சென்றதாகவும், அங்கு ஒரு தொழிற்சாலையில் தங்கியிருந்து தினசரி கூலி வேலை செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தான் இறந்ததாக அறிவிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், தனது பெற்றோரிடம், தான் உயிரோடு இருப்பதைக் கூறுவதற்காக வந்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே வாரிஷாவை கொடுமைப்படுத்தியதாக அவரது கணவரும் மாமியாரும் சிறையில் உள்ள நிலையில், இப்போது வரை சூட்கேஸில் இருந்த அந்த பெண் யார் என்று தெரியாமல் காஸியாபாத் போலீசார் திணறி வருகின்றனர்.

மேலும் தவறான உடலை தன் மகளென அடையாளம் காட்டியதற்காக வாரிஷாவின் தாய் மற்றும் சகோதரர்கள் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்