'அண்ணே, காசை அப்புறமா கொடுங்க'... 'கடனுக்கு கொடுத்த லாட்டரிக்கு அடித்த 6 கோடி'... 'ஆனா பரிசு விழுந்தது கூட தெரியாது'... வாட்ஸ்ஆப்பில் இருந்த லாட்டரி போட்டோவை வைத்து இளம்பெண் செய்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்த உலகில் இப்படியும் சில மனிதர்கள் இருப்பார்கள் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த சுனங்கம் வேலியை சேர்ந்தவர் ஸ்மிஜா மோகன். கேரளாவில் லாட்டரி விற்பனை என்பது சட்டப்படி செல்லும் என்பதால், அவர் அந்த பகுதியில் லாட்டரி விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கேரள அரசின் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வந்தது. பின்னர் குலுக்கல் நடைபெற்று முடிந்த அன்று பம்பர் லாட்டரி சீட்டுகள் சில மீதம் இருந்துள்ளது. அதில் ஒன்றைத் தனது கடையில் எப்போதும் லாட்டரி சீட்டு வாங்கும் கீழ்மாடு என்ற இடத்தை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் அவர் காசு எதுவும் கொடுக்கவில்லை.

அவர் நேரிலும் வந்து லாட்டரி சீட்டினை வாங்கவில்லை. சந்திரனைத் தொடர்பு கொண்ட ஸ்மிஜா, ''தான் வாட்ஸ்அப்பில் அந்த லாட்டரி சீட்டினை புகைப்படம் எடுத்து அனுப்பி வைப்பதாகவும், நேரில் பார்க்கும் போது அதற்கான பணத்தைத் தருமாறும்'' ஸ்மிஜா கூறியுள்ளார். இந்த நிலையில் ஸ்மிஜா கடனாகச் சந்திரனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பம்பர் பரிசு கிடைத்தது.

இதனைப் பார்த்த ஸ்மிஜா இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆனால் தான் ஸ்மிஜாவிடம் இருந்து கடனாக வாங்கிய லாட்டரி சீட்டிற்குத் தான் 6 கோடி ரூபாய் விழுந்துள்ளது என்பது சந்திரனுக்குத் தெரியாது. ஒரிஜினல் லாட்டரி சீட்டும் ஸ்மிஜாவின் கையில் தான் இருந்தது. ஆனால் இந்த இடத்தில் தான் ஸ்மிஜா எவ்வளவு நேர்மையாக நடந்து கொண்டார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தன்னிடம் இருந்த லாட்டரி சீட்டினை எடுத்துக் கொண்டு சந்திரனின் வீட்டிற்குச் சென்ற ஸ்மிஜா, ரூ.6 கோடி பரிசு விழுந்த சீட்டை அவரிடம் ஒப்படைத்து சந்திரனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஸ்மிஜா, அந்த லாட்டரி சீட்டிற்கு உரியத் தொகையான ரூபாய் 200யை மட்டும் பெற்றுக் கொண்டு திரும்பியுள்ளார்.

இதற்கிடையே ஸ்மிஜாவின் நேர்மையைக் கண்டு நெகிழ்ந்துபோன சந்திரன் அவருக்கு 1 லட்ச ரூபாய் பரிசாகக் கொடுக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் நான் என்னுடைய பணியைத் தான் செய்தேன், எனக் கூறி அந்த ஒரு லட்ச ரூபாயை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் சந்திரன் ஸ்மிஜாவை வற்புறுத்திய நிலையில், அவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய்க்கான செக்கைப் பெற்றுக் கொண்ட ஸ்மிஜா, அதை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தன்னிடம் தான் ஒரிஜினல் லாட்டரி சீட்டு இருக்கிறது, அதற்கு 6 கோடி ரூபாய் பரிசும் விழுந்திருக்கிறது என்பதை அறிந்தும் ஸ்மிஜா நேர்மையாக லாட்டரி சீட்டினை சந்திரனிடம் ஒப்படைத்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்