'அரசியல் களத்திற்கு தயாராகிறாரா அடுத்த வாரிசு'?... 'திடீர்ன்னு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்'?... பரபரப்பை கிளப்பிய ஒரே ஒரு விளம்பரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அவர் அரசியலுக்கு வர தயாராகிவிட்டார் என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் பரவ ஆரம்பித்து விட்டது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் சனிக்கிழமை முதல் பக்கத்தில் வெளியான முழுப் பக்க விளம்பரம்தான் மகாராஷ்டிர அரசியலில் தற்போதைய சலசலப்பிற்கு முக்கிய காரணம். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இளைய மகன் தேஜஸ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் விளம்பரத்தில் உத்தவ் தாக்கரே, அவரின் மனைவி ராஷ்மி மற்றும் மூத்த மகன் ஆதித்யா ஆகியோரின் சிறிய புகைப்படங்களுடன் தேஜஸின் புகைப்படம் பெரிய அளவில் இடம்பெற்றிருந்தது.

அந்த விளம்பரத்தின் வலதுபுறத்தில் சிவசேனா சின்னத்துடன் "தாக்கரே குடும்பத்தின் விவியன் ரிச்சர்ட்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தைக் கொடுத்தவர் உத்தவ் தாக்கரேவின் வலது கை என அழைக்கப்படும் சிவசேனா செயலாளர்களில் ஒருவரான மிலிந்த் நர்வேகர்.

இதற்கு முன்பு இல்லாத அளவு தற்போது வெளியாகியுள்ள தேஜஸ் பிறந்தநாள் விளம்பரங்கள் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த விளம்பரம் விவாத பொருளாக மாற முக்கிய காரணம், சிவசேனா கட்சித் தலைவர்கள் இதுவரை உத்தவ் மற்றும் ஆதித்யாவை மட்டுமே அரசியலில் தொடர்புபடுத்தி விளம்பரடுத்தி வந்தது தான்.

25 வயதான தேஜஸ், இதுவரை எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. தீவிர வனவிலங்கு ஆர்வலரான தேஜஸ், பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், மும்பையின் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிலும் தான் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். தேஜஸ் குறித்துப் பேசிய அவரது நண்பர்கள், ''தேஜஸ் ஒரு அடக்கமான மனிதர். அவர் எங்கு சென்றாலும் தனது தாக்கரே குடும்ப செல்வாக்கைப் பயன்படுத்தவே மாட்டார்.

களத்தில் இருக்கும்போதெல்லாம், அவர் காட்டுக்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிப்பது, அங்குள்ள உள்ளூர் மக்களுடன் பழகுவது என எளிமையாக இருப்பார்'' என குறிப்பிட்டுள்ளார்கள். மேற்குத்தொடர்ச்சி மலைகள் குறித்து நன்கு அறிந்தவரான தேஜஸ், ''கடந்த ஆண்டு நண்டு, சிலந்தி, மீன் மற்றும் பாம்புகள் பற்றி அதிகம் அறியப்படாத ஆராய்ச்சியை ஆதரிக்கும் நோக்கில், லாப நோக்கமற்ற தாக்கரே வனவிலங்கு அறக்கட்டளையை'' தொடங்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் காடு, மலை எனச் சுற்றித் திரியும் இளைஞரை அரசியலில் தொடர்புப் படுத்தி வெளியாகியுள்ள இந்த விளம்பரம், அவர் அரசியலுக்கு வர அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது. தேஜஸின் அரசியல் வருகைக்கு ஏற்கனவே அவர் அடித்தளம் போட்டுவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதற்கு முக்கிய காரணியாக ஆரே காலனி விவகாரம் பார்க்கப்படுகிறது.

மும்பையில் கொலபா - பாந்திரா - சீப்ஸ் இடையே 3-வது மெட்ரோ ரயில் பாதைக்கான மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முந்தைய பாஜக அரசு மும்பையின் இயற்கை எழில் கொஞ்சும் மரம், செடி, கொடிகள் நிறைந்த ஆரே காலனியை தேர்ந்தெடுத்தது. சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆர்வலர்கள் கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்தனர். ஆனால் பட்நாவிஸ் தலைமையிலான அரசு ஆரே காலனியில் பணிமனை அமைக்கும் முடிவில் உறுதியாக இருந்தது.

ஆனால் கூட்டணி கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் திட்டம் தடைப்பட்டது. நாளடைவில் சிவசேனா ஆட்சிக் கட்டிலுக்கு வந்தபின் 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆரே காலனி வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பணி மனை கன்ஜூர்மாக் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. உத்தவ் அரசின் இந்தக் கொள்கை முடிவுக்கு பின்னணியில் தேஜஸின் பங்கு மிகப் பெரியது என கூறப்படுகிறது.

அதோடு தந்தை உத்தவ் தாக்கரே மற்றும் சகோதரன் ஆதித்யா உடன் அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளார் தேஜஸ். 2019 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சங்கம்னெரில் நடந்த பேரணியில் தந்தையுடன் கலந்துகொண்டார்.

அந்தக் கூட்டத்தில் அவர் மேடையேறிய போது `சிவசேனாவின் புலி' என்று அக்கட்சி தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். இவ்வாறு பல்வேறு சமிக்கைகள் தேஜஸ் குறித்து வெளியாகி வரும் நிலையில் அவரது அரசியல் வரவு என்பது உறுதி என்றே மகாராஷ்டிர அரசியலில் பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்